விவசாயிகளிடம் பணம் பறிக்கும் இடை தரகர்கள் மீது நடவடிக்கை - அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

போலீஸ் தரப்பில், எந்த புகாரும் தங்களுக்கு வரவில்லை என்று பதிலளிக்கப்பட்டது.
விவசாயிகளிடம் பணம் பறிக்கும் இடை தரகர்கள் மீது நடவடிக்கை - அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தற்போது பின்பற்றப்படும் டோக்கன் நடைமுறையை நீக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை அணுகும் விவசாயிகளிடம் இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் நேரடியாகவே பதிவுசெய்து டோக்கன் பெற ஏதுவான நடைமுறையை உருவாக்க உத்தரவிட வேண்டும். கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டு'' என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சட்டவிரோதமாக பணம் கேட்டு இடைத்தரகர்களால் விவசாயிகள் துன்புறுத்தப்படுவது குறித்து 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் அளித்தும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. போலீஸ் தரப்பில், எந்த புகாரும் தங்களுக்கு வரவில்லை என்று பதிலளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, மனுதாரர் புதிதாக கோரிக்கை மனுவை அனுப்பவேண்டும். அந்த தீவிர குற்றச்சாட்டை கருத்தில் கொண்டு, அவரது மனுவை கூட்டுறவு துறை செயலாளர், நுகர்பொருள் வாணிபக் கழக தலைவர், நிர்வாக இயக்குநர், லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குநர் ஆகியோர் இரண்டு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com