வன்முறையைத் தூண்டியதாக வழக்கு: திருமாவளவனை விடுவித்து ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை,
புதுச்சேரியில் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 8-ந்தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது, இருபிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது ஒதியம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை புதுச்சேரி நீதிமன்றம் 2025-ம் ஆண்டு தள்ளுபடி செய்திருந்ததது அந்த உத்தரவை ரத்து செய்து தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில், திருமாவளவன் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சம்பவம் நடந்து 4 ஆண்டுகளுக்கு பின்னர் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுவும் அரசின் முன் அனுமதி பெறாமல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர் என்று திருமாவளவன் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
திருமாவளவனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசின் முன் அனுமதி தேவையில்லை. அதனால், வழக்கில் இருந்து அவரை விடுவிக்கக்கூடாது என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபடவில்லை, அரசின் முன் அனுமதியும் பெறவில்லை. எனவே, திருமாவளவனை வழக்கில் இருந்து விடுவிக்கிறேன். புதுச்சேரி கோர்ட்டு உத்தரவை ரத்து செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.

