நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக சம்பளம்.. தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் கடந்த 2015ம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படையில் 7,243 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். 2 ஆண்டுகளுக்குப் பின் பணி நிரந்தரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டும், 4 ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்த வழக்கில், தொகுப்பூதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணி செய்வதால் அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து நிரந்தர செவிலியர்களின் பணியுடன், தொகுப்பூதிய செவிலியர்கள் செய்யும் பணியை ஒப்பீடு செய்து 6 மாதத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டுமென கடந்த 2018-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அரசு நிறைவேற்றாததால், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தொகுப்பூதிய செவிலியர்கள், நிரந்தர செவிலியர்களின் பணி குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஒய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் பாரதிதாசன் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் இன்று பிறப்பித்த உத்தரவில் , நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் பாரதிதாசன் அடங்கிய குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை 3 மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தற்போதைக்கு இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்து வைப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.






