மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கலாம் ஐகோர்ட்டு உத்தரவு

மேல்முறையீடு நிலுவையில் உள்ளது என்பதால் பரோல் சலுகையை காலவரம்பின்றி நிறுத்த முடியாது என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கலாம் ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

குற்ற வழக்குகளில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், பரோல் வழங்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மாறுபட்ட தீர்ப்பு

குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, சம்பந்தப்பட்ட கைதிக்கு விடுப்பு (பரோல்) வழங்கலாம் என்று ஐகோர்ட்டு 2 நீதிபதிகள் கொண்ட ஒரு டிவிசன் பெஞ்சும், வழங்க முடியாது என்று மற்றொரு டிவிசன் பெஞ்சும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து முடிவு எடுக்க ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஏ. டி.ஜெகதீஷ் சந்திரா, எம்.நிர்மல்குமார், சுந்தர் மோகன் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய முழு பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கில், மாற்று கருத்து இருக்கிறதா? என அறிந்து கொள்ளும் வகையில், ஐகோர்ட்டுக்கு உதவும் நபராக மூத்த வக்கீல் அபுடு குமார் ராஜரத்தினம் நியமிக்கப்பட்டார்.

பரோல் வழங்கலாம்

இந்த வழக்கு விசாரணையின்போது, குற்ற வழக்கில் தண்டனை பெற்றவரின் மேல்முறையீட்டு மனுக்கள் ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது பரோல் வழங்குத் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

அந்த வழக்கில் தமிழ்நாடு அரசும் ஒரு எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் ஒரே நிலைபாடு எடுக்க சுப்ரீம்கோர்ட்டு ஆய்வு செய்து வருகிறது என்று மூத்த வக்கீல் விளக்கம் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட முழு பெஞ்ச், ''மேல்முறையீடு நிலுவையில் உள்ளது என்பதால் பரோல் சலுகையை காலவரம்பின்றி நிறுத்த முடியாது. எனவே, மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது கைதிகளுக்கு பரோல் வழங்கலாம்'' என்று உத்தரவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com