திருமாவளவன் வழக்கை அவசரமாக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடர்பாக திருமாவளவன் வழக்கை அவசரமாக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு.
திருமாவளவன் வழக்கை அவசரமாக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு
Published on

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருகிற அக்டோபர் 2-ந்தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க போலீசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி தினத்தன்று அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதியளிக்கக்கூடாது. மகாத்மா காந்தியை கோட்சே சுட்டுக்கொலை செய்தபோது இனிப்பு வழங்கி கொண்டாடியது இந்த இயக்கம் தான். அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிக்க முயற்சிக்கிறது" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையனிடம் திருமாவளவனின் வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஆர்.எஸ்.எஸ். வழக்கில் திருமாவளவன் மனுதாரரோ, எதிர்மனுதாரரோ இல்லை. ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாமே தவிர, அதை திரும்ப பெறவேண்டும் என்று கோரிக்கை விடுக்க முடியாது என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்பாக திருமாவளவன் தரப்பு வக்கீல் முறையிட்டார். அவர்களும், இதை ஏற்க மறுத்து விட்டனர். மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com