அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட ஐகோர்ட்டு மறுப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிப்பது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும், சுப்ரீம் கோர்ட்டை அணுகி நிவாரணம் பெறலாம் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட ஐகோர்ட்டு மறுப்பு
Published on

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.

இதில், நீதிபதி நிஷாபானு, செந்தில்பாலாஜியின் கைது சட்டவிரோதம். அவரை உடனே விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கு மாறாக நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, ''கைது நடவடிக்கை சட்டவிரோதம் இல்லை. செந்தில்பாலாஜி உடல் குணமடைந்த பின்னர், அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கலாம்'' என்று உத்தரவிட்டார்.

தீர்ப்பில் உறுதி

இதனால், இந்த வழக்கு 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அவர், நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி தீர்ப்பை உறுதி செய்தார். செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்குவது குறித்து ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை அனுப்பி வைத்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நிஷா பானு, 'செந்தில்பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என்ற அளித்த தீர்ப்பில் உறுதியாக உள்ளேன். அதனால் இந்த வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்க ஏதும் இல்லை' என்று கூறினார்.

நிலுவையில் வழக்கு

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'காவலில் வைத்து விசாரிப்பது குறித்து முடிவு செய்யவே இந்த வழக்கை இந்த அமர்வுக்கு 3-வது நீதிபதி அனுப்பி வைத்துள்ளார். அதனால், அதுகுறித்து விசாரித்து முடிக்க வேண்டும்' என்றார்.

மனுதாரர் மேகலா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, 'ஆட்கொணர்வு வழக்கின் 3 நீதிபதி களின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது. அதுவரை இந்த வழக்கை நிலுவையில் வைக்கலாம்' என்று கூறினார்.

அவசியம் இல்லை

இதையடுத்து நீதிபதிகள், 'சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வருவதால், காவலில் வைத்து விசாரிப்பது குறித்து அமலாக்கப்பிரிவு அங்கே முறையிட்டு நிவாரணம் பெறலாம்.

இந்த வழக்கை நிலுவையில் வைக்கவும் அவசியம் இல்லை. அதனால், முடித்து வைக்கிறோம்'' என்று தீர்ப்பு அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com