

மீனம்பாக்கம்,
சென்னை விமான நிலையத்தில் ரூ.14. 4 கோடி உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அதனை தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த பெண்ணை கைது செய்தனர்.
தாய்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்படும்படியான பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
இதில் சுற்றுலா பயணியாக தாய்லாந்து சென்று திரும்பிய பெண் ஒருவரின் சூட்கேஸ் ஸ்கேனிங் செய்யப்பட்டபோது. அதில் சந்தேகப்படும்படியான பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அந்த பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை செய்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.
இதையடுத்து சூட்கேசை திறந்து சோதனை செய்தபோது, தாய்லாந்து நாட்டு உணவுப்பொருட்கள் அடங்கிய 6 பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை பிரித்து சோதனை செய்ததில், பதப்படுத்தப்பட்ட உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் 14 கிலோ 437 கிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.14. 5 கோடி என கூறப்படுகிறது.
இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு கடத்தல் குருவியாக செயல்பட்டாரா?, போதைப்பொருளை யாரிடம் ஒப்படைக்க கொண்டு வந்தார்?. அவரை தாய்லாந்துக்கு அனுப்பி வைத்த கும்பலைச் சேர்ந்தவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.