

தேவனஹள்ளி,
பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு உயர்ரக கஞ்சா கடத்தி வரப்படுவது பற்றி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 4 விமானங்களில் வந்திறங்கிய பயணிகளிடமும், அவர்களது உடைமைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 4 விமானங்களிலும் வந்த தலா ஒரு பயணி உடைமைகளுக்குள் உயர்ரக கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து. 4 பயணிகளும் கைது செய்யப்பட்டார்கள்.
ஒரு பயணியிடம் இருந்து 1 கிலோ 12 கிராம் உயர்ரக கஞ்சாவும். மற்றொரு பயணியிடம் 2 கிலோ உயர்ரக கஞ்சாவும். இன்னொரு பயணியிடம் 942 கிராமும். மேலும் ஒரு பயணியிடம் 930 கிராம் உயர்ரக கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
4 பயணிகளிடம் இருந்தும் மொத்தம் ரூ.1.75கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. கைதான 4 பேர் மீதும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.