சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்

மொத்தம் 15 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
சென்னை விமான நிலையம்
Published on: 

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடியே 26 லட்சம் மதிப்புள்ள உயர்ரக கஞ்சாவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாய்லாந்து விமானம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் ஒன்று சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து, சந்தேகத்திற்கிடமான பயணிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனை

அப்போது சுமார் 30 வயது வாலிபர் ஒருவர் சுங்கப்பகுதியை கடந்து வெளியே செல்ல முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அவரது சூட்கேசை திறந்து சோதனை செய்தனர். அதில் 26 காற்றுப்புகாத பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றில் தாய்லாந்து நாட்டு உணவுப் பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் அவற்றை பிரித்து சோதனை செய்தபோது, அதில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 15 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடியே 26 லட்சம் என சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாலிபர் கைது

இதையடுத்து, போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்தி வந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு கடத்தல் குருவியாக செயல்பட்டாரா?, போதைப்பொருளை யாரிடம் ஒப்படைப்பதற்காக கடத்தி வந்தார்?. அவரை தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தகும் பலைச் சேர்ந்தவர்கள் யார்? என்பது குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com