சென்னை விமான நிலையத்தில் உயர் ரக போதைப்பொருள் பறிமுதல்

சுமார் 53 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கப் பசை வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் உயர் ரக போதைப்பொருள் பறிமுதல்
Published on

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்களும் உள்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்படும் பொருட்களும் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவது வழக்கம். அப்படிப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மறைத்துக் கொண்டு செல்லப்படும் பொருட்கள் பிடிபடும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில், தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் விமானத்தில் இருந்து வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடந்து பயணியிடம் சோதனை நடத்தியதில் உயர் ரக (ஹைட்ரோபோனிக்) கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அதை கொண்டு வந்த கேரள பயணியை கைது செய்தனர். இதன் மதிப்பு ரூ.6 கோடி என கூறப்படுகிறது. போதைப்பொருள் எங்கிருந்து வந்தது? எப்படி கிடைத்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைபோல சுமார் 53 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கப் பசை வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்டது சுங்கத்துறை ஊழியர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. விசாரணையில் சென்னை விமான நிலைய ஊழியரே துபாயில் இருந்து 414 கிராம் தங்கப் பசையை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனுடைய மதிப்பு 53 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com