விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்பதில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்பதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்பதில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு
Published on

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய 3 தாலுகாவை சேர்ந்த விவசாயிகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. ஹஸ்சரத்பேகம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் ராமன், வேளாண்மை உதவி இயக்குனர்கள் ரமேஷ், இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடந்த மாதம் கொடுத்த மனுக்களுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் குறித்து வாசிக்கப்பட்டது. பின்னர் விவசாயிகள் ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்துவிட்டு புகாரை தெரிவித்தனர்.

அதில், திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலையையில் உள்ள எந்திரங்களை அரசு நவீனமயபடுத்தாமல், ஒவ்வொரு ஆண்டும் ரூ.4 கோடியில் பழுது பார்பதால் கரும்பு விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படாது. இந்த ஆண்டு கரும்பு அரவையை நவம்பர் மாததிற்கு முன்பாக தொடங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் கோட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்பது இல்லை. வருவாய் துறை சார்பில் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர்கள், வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

திருத்தணி அடுத்த அருங்குளம் பகுதியில் கொசஸ்தலை ஆற்று கால்வாய் பகுதியில் தனிநபர் ஒருவர் புஞ்சை அனாதீனம் இடத்தை ஆக்கிரமித்து இருப்பதாகவும், பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விவசாயிகள் கூறினர். திருத்தணி கோட்டத்தில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிகள் மதியத்திற்கு மேல் திறப்பது இல்லை கால்நடை ஆலோசனை இலவச எண்களும் உபயோகத்தில் இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆர்டிஓ.விடம் விவசாயிகள் தெரிவித்தனர். திருத்தணி கோட்ட அளவில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு 15 விவசாயிகள் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com