தமிழகத்தில் 3 வழித்தடங்களில் அதிவேக ரெயில் சேவை: சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய டெண்டர் வழங்கல்

பிரபல தனியார் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் வழங்கியுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் மித அதிவேக ரெயில்வே சேவையை சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் - விழுப்புரம் வரை 167 கிலோ மீட்டருக்கும், சென்னை - காஞ்சீபுரம் - வேலூர் வரை 140 கிலோ மீட்டருக்கும், கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் வரை 185 கிலோ மீட்டருக்கும் வழித்தடங்கள் உருவாக்கிட தேவையான விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
பட்ஜெட் அறிவிப்பின்படி, சென்னை - செங்கல்பட்டு- திண்டிவனம் - விழுப்புரம் மற்றும் சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் மற்றும் கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் ஆகிய 3 வழித்தடங்களில், மித அதிவேக ரெயில் சேவையை (RRTS) உருவாக்கிட, விரிவான சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்வதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டது.
இந்த நிலையில், பிரபல தனியார் நிறுவனத்துக்கு விரிவான சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்வதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த நிறுவனமானது, வழித்தடங்கள் உருவாக்குவதற்கான செலவினங்கள் எவ்வளவு?, திட்டம் நடைமுறைக்கும் வரும் நிலையில், இந்த வழித்தடத்தில் புதிதாக பயணிப்பவர்களின் எண்ணிக்கை எவ்வாறாக இருக்கும்?, நிதி உதவி பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் என அனைத்து அம்சங்களும் கொண்ட ஓர் அறிக்கையினை தயார் செய்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க உள்ளது.
இதன் பின்னர், திட்டத்தில் ஏதேனும் மாறுதல்கள் இருக்கும் பட்சத்தில், அது சரிசெய்யப்பட்டு, தமிழக அரசிடம் மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிக்கையை சமர்ப்பிக்கும். இதனை தொடர்ந்து, மெட்ரோ ரெயில் நிறுவனம், தமிழக அரசின் மூலமாக உலக வங்கியின் நிதி மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் இத்திட்டத்தை செயல்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.






