

மதுரை,
கடந்த மாதம் 22-ந்தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
பலியானவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை செய்து தர வேண்டும் என்று ஏராளமான வழக்குகள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணைக்கு வைகோவும் நேரில் வந்திருந்தார். அவர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், அஜ்மல்கான் வாதாடுகையில், கடந்த மாதம் 28-ந் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், காற்று மாசுபடுதல், தண்ணீர் மாசுபடுதல் குறித்த சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனுமதி காலாவதி ஆகிவிட்டது.
மீண்டும் புதிதாக அனுமதி கொடுக்கவில்லை என்பதால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 48-வது பிரிவின் அடிப்படையில் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் தீர்ப்பு ஆயத்திலோ அல்லது கோர்ட்டிலோ முறையீடு செய்து அனுமதி பெற்றால் தமிழக அரசு ஆணை செல்லுபடி ஆகாது. ஆலையை மீண்டும் இயக்குவதற்கு வாய்ப்பு உண்டாகும். எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான காரணங்களை விளக்கமாக பட்டியலிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான இந்திய அரசியல் சட்டத்தின் 48-வது பிரிவின்கீழ் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
அப்போது தான் ஆலையை நிரந்தரமாக மூடும் சூழல் உருவாகும்.இவ்வாறு அவர் வாதாடினார்.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-காற்று, தண்ணீர் சட்டப்பிரிவுகளின்கீழ் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்காததை மட்டுமே குறிப்பிட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் 48-வது பிரிவை காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு வழங்கிய அரசு ஆணை திட்டவட்டமாகவும், தெளிவாகவும் இல்லை. எனவே அதை ஒரு கொள்கை முடிவாக எடுத்து தமிழக அரசு ஆணை பிறப்பிப்பதற்கு இந்த கோர்ட்டு யோசனை கூறுகிறது. இந்த யோசனையை தமிழக அரசுக்கு அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும். என்று கூறி வழக்கு விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
அதன்படி இன்று, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண், உயர்மட்ட அளவில் கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட் ஆலை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடத்தான் அரசாணையை அரசு வெளியிட்டது என்றும் தெரிவித்தார். இதையடுத்து, வைகோ தொடர்ந்த வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை முடித்து வைத்தது.