முதல்-அமைச்சர் போல் சித்தரித்து விநாயகர் சிலை: போலீஸ் நிலையம் முன்பு இந்து முன்னணி நிர்வாகி தர்ணா

சென்னையில் முதல்-அமைச்சர் விஜய் போல் சித்தரித்து விநாயகர் சிலை வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிய வேண்டும் என இந்து முன்னணி நிர்வாகி வலியுறுத்தினார்.
முதல்-அமைச்சர் போல் சித்தரித்து விநாயகர் சிலை.
Published on

சென்னை,

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் முதல்-அமைச்சர் விஜய் போல் சித்தரித்து விநாயகர் சிலை வைக்கப்பட்டதை கண்டித்து ஆர்.கே.நகர் போலீஸ் நிலையம் முன்பு இந்து முன்னணி மாநில நிர்வாகி ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

முதல்-அமைச்சர் விஜய் போல் சித்தரித்து விநாயகர் சிலைகள்

சென்னை கொருக்குப்பேட்டை, கருமாரியம்மன் நகரில் முதல்-அமைச்சர் விஜய் போல் சித்தரித்து விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

போலீஸ் நிலையம் முன்பு இந்து முன்னணி நிர்வாகி தர்ணா

இந்த நிகழ்வு இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் இந்து முன்னணி மாநில இளைஞரணி துணை செயலாளர் செல்வம் என்பவர் நேற்று மதியம் சென்னை ஆர்.கே.நகர் போலீஸ் நிலையம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதானம் செய்தனர்.

த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிய வலியுறுத்தல்

அப்போது அவர், தெய்வங்களை நடிகர் மற்றும் முதல்-அமைச்சர் போல் சித்தரிக்க கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிய வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு போலீசார், அந்த சிலைகளை பறிமுதல் செய்து தனியார் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com