‘தேர்தல் காரணங்களுக்காக இந்து-முஸ்லிம் பிரிவினை உருவாக்கப்படுகிறது’ - பரூக் அப்துல்லா

வேற்றுமையில் ஒற்றுமைக்கு இந்தியா எப்போதும் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பாலிவுட்டில் தனக்கு பட வாய்ப்புகள் குறைந்ததற்கு மதம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது பரூக் அப்துல்லா கூறியதாவது;-
“கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் வெறுப்புத் தீ மூண்டு, தேர்தல் காரணங்களுக்காக இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வேண்டுமென்றே பிரிவினை உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. அனைத்து மத மக்களும் ஒன்றாக வாழும் வேற்றுமையில் ஒற்றுமைக்கு இந்தியா எப்போதும் ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. சில தனிநபர்கள் மதத்தின் பெயரால் பிளவுகளை தூண்ட நினைத்தால், அதைத் தடுப்பது சவாலானது. ஆனால் இதுபோன்ற விஷயங்கள் நமக்கு புதிதல்ல.
ஜம்முவில் வெறுப்பை பரப்புவது யார்? ஜம்முவை பிரிக்க கோஷங்களை எழுப்புவது யார்? அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? மதத்திற்காக யார் போராடுகிறார்கள்? காந்தியை கொன்றவனுக்கு யார் கோயில் கட்டுகிறார்கள்?
நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போராடியுள்ளோம். நாங்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பியிருந்தால், 1947-ம் ஆண்டிலேயே அவ்வாறு செய்திருப்போம். ஆனால் நாங்கள் இந்தியாவில் தங்கினோம். நாங்கள் காந்தியின் இந்தியாவில் இருந்தோம். இன்றைய இந்தியா இனி காந்தியின் இந்தியாவைப் போல் இல்லை. மக்கள் இப்போது கஷ்டத்தை உணர்கிறார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






