இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்றுவது என்பது தமிழக இந்துக்களின் அடிப்படை உரிமை உணர்வாகும்.
தமிழிசை சவுந்தரராஜன்
Published on

சென்னை,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்றுவது என்பது தமிழக இந்துக்களின் அடிப்படை உரிமை உணர்வு. இது மறுக்கப்பட்டபோதுதான் அவர்கள் வெகுண்டெழுந்தார்கள். இந்துக்களின் இந்த இயல்பான உணர்வை ஏதோ மதக்கலவரம் போலவும், பிரிவினையை ஏற்படுத்தும் என்பதை போலவும் ஒரு தோற்றத்தை அரசு ஏற்படுத்தியது.

தீபத்தூண்

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், சிறுபான்மையினரை பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் இந்துக்களை முற்றிலுமாக புறந்தள்ளினார்கள். தமிழக மக்கள் அதனால் அவர்களை புறந்தள்ளினார்கள். ஆனால் தற்போதைய அரசும் அதே பாதையில் செல்வது வருத்தத்திற்குரியது.

திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகி இருப்பது, நீங்கள் நீதிமன்றம் செல்கிறோம் என்று நினைக்கிறீர்கள்; ஆனால் இந்துக்களுக்கான நீதி மறுக்கப்படுகிறது என்பதை இந்த அரசு உணர வேண்டும்.

சென்ற அரசு மாதிரி இல்லாமல், இந்த அரசு உடனே இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பூரண சந்திரன் என்ற தம்பி அதற்காகவே உயிரை மாய்த்திருக்கிறான் என்பதையும் மனதில் கொண்டு, திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தை ஒரு சட்டப் பிரச்சினையாக மாற்றாமல், மதப் பிரச்சினையாகவும் மாற்றாமல், உணர்வுபூர்வமான உரிமை என்ற விதத்தில் அதற்கு அனுமதி அளித்து அதை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com