வரலாற்று சின்னங்கள் முறையாக பராமரிக்கப்படுமா?

வரலாற்று சின்னங்கள் முறையாக பராமரிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளன.
Published on

நாமக்கல் மாவட்டம் வரலாறு, கலாசாரம் மற்றும் இயற்கை அழகுடன் செழுமையான பாரம்பரியத்தை கொண்ட தாயகமாக உள்ளது.  இங்கு மலைக்கோட்டை, பழமையான கோவில்கள், ஐவர்படுக்கை, சமணர் படுக்கை, தெப்பக்குளம் என பாதுகாக்கப்பட வேண்டிய நினைவு சின்னங்கள் ஏராளமாக உள்ளன.

நாமக்கல் மலைக்கோட்டை

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஏறத்தாழ 136 ஏக்கர் பரப்பளவில் ஒரே கல்லினால் ஆன பெரிய மலை உள்ளது. இந்த மலையின் உயரம் 65 மீட்டர் ஆகும். பிரசித்தி பெற்ற இந்த மலையின் மீது 1623-ம் ஆண்டு நாமக்கல் பகுதியை ஆண்ட சிற்றரசன் ராமச்சந்திர நாய்க்கனால் கோட்டை கட்டப்பட்டது என கூறப்படுகிறது. ஏறத்தாழ 5 அடி உயரம் கொண்ட இந்த கோட்டையின் மதில் சுவரில் உள்ள துளையில் துப்பாக்கியை வைத்து, கீழே சாலையில் போவோரை குறி வைத்து சுடும் அளவிற்கு இதன் மதில் சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஆயுத கிடங்கு ஒன்றும் மலை மீது உள்ளது.

இந்த கோட்டை சுவர் கட்டி ஏறத்தாழ 400 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. தற்போது இந்த மலைக்கோட்டை சுவரில் ஆங்காங்கே செடிகள் முளைத்து கோட்டை சுவரை பலவீனபடுத்தி வருகிறது. இவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது. இதேபோல் மலைக்கோட்டைக்கு வரும் கல்நெஞ்சம் கொண்ட காதலர்கள் சிலர் கோட்டை சுவரில் தன்னுடைய பெயர் மற்றும் காதலியின் பெயரை எழுதி வைக்கிறார்கள். இதுவும் கோட்டையின் அழகை கெடுப்பதாக இருந்து வருகிறது. இதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய அளவில் புகழ்பெற்ற மன்னன் திப்புசுல்தான், இந்த கோட்டையை கிழக்கிந்திய கம்பெனியை (ஆங்கிலேயர்கள்) எதிர்த்து போராட பயன்படுத்தினார் என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்த கோட்டையின் அடிவாரத்தில் உள்ள குளக்கரை திடலில் கடந்த 1933-ம் ஆண்டு நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தி பேசினார் என்ற பெருமையும் இந்த மலை அடிவாரத்துக்கு உண்டு. இந்த மலைக்கோட்டையின் அழகை இரவிலும் பொதுமக்கள் ரசிக்கும் வகையில், ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

பரமத்தி கோட்டை

நாமக்கல்லில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் பரமத்தி உள்ளது. இங்குள்ள பைபாஸ் சாலையின் இடதுபுறத்தில் உயரமான மண்திட்டு உள்ளது. இதுதான் கி.பி. 16-ம் நூற்றாண்டில் சேர, சோழ, பாண்டிய நாடுகளிலேயே அறிவிலும், வீரத்திலும் சிறந்து விளங்கிய அரைய நாட்டின் குறுநில மன்னன் இளையநாயகன் ஆட்சி செய்த மண்கோட்டை ஆகும்.

கி.பி. 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கொங்கு நாட்டில் 24 நாடுகள் அடங்கி இருந்தன. கிழக்கே ஆரைக்கல், மேற்கே சோழசிராமணி, வடக்கே திருச்செங்கோடு, தெற்கே காவிரி கரை இவற்றை எல்லைகளாகவும், பரமத்தியை தலைநகரமாகவும் கொண்டு அரையநாடு இருந்தது.

அரையநாட்டின் தலைநகரமான பரமத்தியில் காணப்படும் இக்கோட்டையின் வடதுபுறம் திருமணி முத்தாறும், கிழக்கே இடும்பன் குளமும் அமைய பெற்று உள்ளன. இக்கோட்டையை சுற்றிலும் ஆழமான அகழி இருந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது. இக்கோட்டையின் நீளம் மற்றும் அகலம் 1,000 அடி ஆகும். இக்கோட்டை சதுர வடிவில் அமைந்து உள்ளது.

இக்கோட்டையின் நுழைவு வாயிலில் கல் தூண்கள் சிதைந்து காணப்படுகின்றன. கோட்டையின் உட்புறம் வடகிழக்கு பகுதியில் சிறிய பொய்கை இருந்ததற்கான அடையாளமும் காணப்படுகிறது. இக்கோட்டையின் தென்மேற்கு புறத்தில் உள்ள ஒரு பாறையில் அனுமார் புடைப்பு சிற்பம் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த மண்கோட்டை பகைவர்களால் சூறையாடப்பட்டு, தற்போது சிதிலம் அடைந்து காணப்படுகிறது.

சமணர் படுக்கை

மோகனூர் அருகே உள்ள சென்னாக்கல்புதூரில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமணர்கள் உறங்குவதற்காக செதுக்கப்பட்ட கற்படுக்கை அமைந்துள்ளது. அந்த படுக்கை இன்றளவும் வழவழப்பு மாறாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பாறையில் செதுக்கப்பட்டுள்ள படுக்கை சமண முனிவர்கள் இங்கு நீண்ட காலம் தங்கி தவமிருந்து வாழ்ந்தனர் என்பதை உணர்த்துகிறது.

வரலாற்று சின்னங்களே அடையாளம்

நாமக்கல் மாவட்ட ஆன்மிக கூட்டமைப்பின் தலைவர் நித்ய சர்வானந்தா கூறியதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க சின்னங்களை பாதுகாப்பது நமது கடமை. அதிலும் குறிப்பாக நாமக்கல் மலைக்கோட்டை சிறப்பு மிக்கது. மலையை சுற்றி உள்ள கோவில்களை புனிதமாக போற்றி பாதுகாக்க வேண்டும். மலைக்கோட்டையின் பல பகுதிகளிலும் புதர்மண்டி கிடக்கிறது. இதை சீரமைக்க வேண்டும். மலைக்கோட்டையின் கிழக்கு பகுதியில் மகாத்மா காந்தி பேசிய இடம் மற்றும் 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் சுதந்திர தீபம் ஏற்றப்பட்ட இடங்கள் பராமரிப்பின்றி உள்ளன.

சுதந்திரம் பெற்றதற்காக கட்டப்பட்ட ஸ்தூபியை சுற்றி ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும். பஸ்நிலையம் அருகே உள்ள தொட்டண்ணா மணிக்கூண்டு பராமரிப்பு இல்லாமல் உள்ளது. 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவில்கள் மாவட்டத்தில் பல பராமரிப்பின்றி உள்ளன. உதாரணமாக பருத்திபள்ளி ஈஸ்வரன் கோவில், பொம்மசமுத்திரம் ஈஸ்வரன் கோவில் போன்ற பல கோவில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன. எனவே மத்திய, மாநில அரசுகள் புராதன சின்னங்களை பராமரித்து பாதுகாக்க வேண்டும். வரலாற்று சின்னங்களே நம் பாரம்பரியத்தின் அடையாளங்கள் என்பதை மறந்துவிட கூடாது.

அடிப்படை வசதிகள்

மோகனூர் அருகே உள்ள மேலபேட்டபாளையத்தை சேர்ந்த குருநாதன்:-

சமணர்கள் வாழ்ந்த காலத்தில் தாங்கள் செல்லும் பாதையில் எறும்பு உள்ளிட்ட சிறிய உயிர்கள் மிதிபட்டு துன்புறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பாதையை மயில் இறகால் பெருக்கி கொண்டே செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர் என கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த சமணப் படுகை ஒரு பாறையில் இருந்து உள்ளது, நான் சிறுவயதில் இருந்தபோது தை மாதம், கரிநாள் போன்ற நாட்களில் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் மேளம் தட்டிச் சென்று இந்த பாறையில் அமர்ந்து செங்கரும்பு, தேங்காய், பழம் கொண்டு போய் சாப்பிடுவது உண்டு. இது குகை போல் இருந்தது.

அதன்பிறகு இந்த பாறையின் மேல் அய்யப்பசாமி சிலை வைப்பதற்காக பாறையை சீர்படுத்தியபோது அதில் இருந்த படுகை பொதுமக்களுக்கு தெரிய வந்தது. தற்போது செதுக்கியது போல் வழவழப்பு தன்மை மாறாமல் காணப்படுகிறது. இந்த சமணர் படுக்கையை அனைவரும் பார்வையிடும் வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் நன்றாக இருக்கும்.

பீரங்கிகள் அமைத்து பாதுகாப்பு

பரமத்தி கோட்டையண்ணசாமி கோவில் அறங்காவலர் தர்மலிங்கம்:-

பரமத்திவேலூர் அருகே உள்ள பரமத்தியில் கோட்டையை கட்டி ஆட்சி புரிந்தவர் அல்லால் இளைய நாயகர். இந்த கோட்டை நான்கு புறமும் தலா ஆயிரம் அடி நீளத்தில் அமைந்துள்ளது. சுமார் 30 அடி உயரமும் 150 அடி அகலத்திலும் அமைந்துள்ளது. இக்கோட்டையை சுற்றி பாதுகாப்பிற்காக சுமார் 150 அடி அகலமுள்ள அகலியும் அமைக்கப்பட்டிருந்தது. கோட்டையில் ஒவ்வொரு மூலையிலும் பீரங்கிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோட்டை நடுவில் கோட்டையண்ண சாமி கோவிலை அமைத்து வழிபட்டு வந்துள்ளார்.

இவர் ஆண்ட காலத்தில் மக்கள் நலப்பணியில் பெரிதும் கவனம் செலுத்தி உள்ளார். ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் உள்ள காவிரி படுகை அணை பகுதியில் ராஜா வாய்க்காலையும், பரமத்தி பகுதியில் இடும்பன் குளத்தையும் வெட்டியுள்ளார். பல கோவில்களுக்கு திருப்பணிகள் செய்து ஆன்மீக பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் வந்த போது பரமத்தி அருகே உள்ள அர்த்தநாரிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பாறையில் பஞ்சபாண்டவர்கள் தங்கி இருந்ததற்கான அடையாளமாக ஐவர் படுக்கை அமைந்துள்ளது. சுனை ஒன்றும் உள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டால் சுனையில் உள்ள தண்ணீரை எடுத்துச் சென்று உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்தால் பாதிப்பு நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. தற்போது சீரமைக்க படாமல் உள்ள அர்த்தனாரி பாளையத்தில் உள்ள ஐவர் படுக்கை மற்றும் பரமத்தி கோட்டை ஆகியவற்றை தமிழக அரசு சீரமைக்க வேண்டும். இதுவே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஆங்கிலேயர் கால மரபங்களா

கொல்லிமலை அருட்பணியாளர் பிரேம்:-

கொல்லிமலை செம்மேட்டில் உள்ள வரலாற்று புகழ்வாய்ந்த மரபங்களா கடந்த 1912-13-ம் ஆண்டில், பழமை வாய்ந்த ஒரு மரத்தினால் தயார் செய்யப்பட்டதாகும். அந்த காலகட்டத்தில் கொல்லிமலையில் கருப்பு நீர் காய்ச்சல் என்னும் ஒரு வியாதி மலைவாழ் மக்களை தாக்கியதால் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வந்தனர்.

இதை அறிந்த ஆங்கிலேயர்கள் ஜெசிமன் பிராண்ட் அவரது மனைவி ஈவ்லிங் பிராண்ட் ஆகியோர் கொல்லிமலையில் தங்கி அவர்களுக்கு மருத்துவ உதவி செய்தனர். அதற்காக மருத்துவ மையமாக அந்த மரபங்களா திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ வசதி செய்த அந்த கணவன்-மனைவி கடந்த 1975-ம் ஆண்டு மறைந்தனர். அவர்களை கொல்லிமலை வழக்கப்படி அங்குள்ள கல்லறைகளில் மிக எளிமையாக அடக்கம் செய்தனர்.

கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு அரிய இடங்களை பார்த்து செல்கின்றனர். அதேபோல அந்த மரபங்களா அதை உருவாக்கியவர்களின் கல்லறை தோட்டம் ஆகியவற்றையும் சுற்றிப் பார்க்கலாம். மேலும் தற்போது அந்த மர பங்களாவை பாதுகாத்து வரும் குழுவினர் அங்கு ஜெசிமன் பிராண்ட், ஈவிலிங் பிராண்ட் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். அத்துடன் வெளி மாநில சுற்றுலா பயணிகள் அங்கு வரலாற்று குறிப்பை தெரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கல்வெட்டு வைப்பதற்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தெப்பக்குளம்

திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு:-

திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குமரமங்கலம். இந்த ஊரில் பழமையான சுந்தரபாண்டீஸ்வரர் பங்கஜவல்லி அம்பாள் கோவில் உள்ளது. கொங்கு நாட்டில் சுந்தரபாண்டியர் என்னும் பாண்டிய மன்னன் உருவாக்கிய மிகப் பழமையான கோவில் இது.

இந்த கோவிலுக்கு நேர் எதிரே நான்கு புறங்களிலும் படித்துறையுடன் கூடிய மிக அழகான தெப்பக்குளம் ஒன்று உள்ளது. இந்த தெப்பக்குளத்தின் மேற்கு கரையில் தனி மண்டபத்தில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவ பெருமாள் ஆகியோர் சிலைகள் செதுக்கப்பட்டு உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தெப்பக்குளம் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக நிரம்பி வழிகிறது.

போதிய பராமரிப்பு இல்லாமல் இந்த புனிதமான குளம் குப்பைகள் சூழ்ந்து முட்செடிகள் மற்றும் புதர் மண்டி மிக அசுத்தமாக காட்சியளிக்கிறது. திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவையினர் மார்கழி ஒன்றாம் நாள் இந்தப் பகுதியை சுத்தம் செய்து, தெப்பக்குளத்தில் உள்ள மாடங்களில் நெய் தீபம் ஏற்றி அகல் விளக்குகளை தெப்பக்குளத்தில் மிதக்க விடுவார்கள். அவ்வப்போது சிவனடியார்கள் உழவாரப்பணி செய்து தெப்பக்குளத்தில் இருக்கும் குப்பைகளை அகற்றினாலும், வாராவாரம் செவ்வாய்க்கிழமை குளத்தை சுற்றி கூடும் சந்தை சமயத்தில் காய்கறி கழிவுகள், இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் பெருகி மீண்டும் அசுத்தம் அடைகிறது.

அழகிய சிற்பங்களுடன் பல நூற்றாண்டுகளாக நிலைத்து நிற்கும் புனிதமிக்க பழமையான இந்த குளத்தில் இருந்து பாண்டீஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கும் வகையில் குளத்து நீரை தூய்மைப்படுத்த வேண்டும் என்றும், குளத்தைச் சுற்றி நடைபாதை அமைத்து தேவையான வசதிகளை செய்து தரும்படி தமிழக அரசு மற்றும் தொல்பொருள் ஆய்வுத் துறையினரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஹியூகோ வுட் கல்லறை

1848-ம் ஆண்டு கோவை மாவட்டம் ஆனைமலை வனப்பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு ஆங்கிலேய அரசால் ஹியூகோ வுட் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். 150 வயதிற்கு மேல் உள்ள மரங்களை வெட்டுவதற்கு தேர்வு செய்தனர். சுமார் 50 ஆண்டுகள் வரை தேக்கு மரங்களை வெட்டி உள்ளனர். ஆனால், மரங்கள் மறு நடவு செய்யப்படவில்லை.

மரங்கள் வெட்டிய பிறகு எந்த பகுதியில் இடம் உள்ளதோ அங்கு ஹியூகோ வுட் விதைகளை தூவினார். வெட்டிய இடங்களில் மீண்டும் மறு நடவு செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். பழங்குடியின மக்களை வேலைவாய்ப்புகளுக்கும், மரங்களை நடுவது போன்ற பணிகளுக்கு முழுக்க, முழுக்க பயன்படுத்தினார்.

பழைய கரடி பங்களா என்று கூறப்படுகிற மவுண்ட் ஸ்டூவர்ட் பங்களாவில் தங்கி பணிபுரிந்தார். இவரது கல்லறை இருக்கிற தோட்டம் 1916-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அவரது கல்லறையை சுற்றி இவரால் நடப்பட்ட தேக்கு மரங்கள் உள்ளன.

தான் வளர்த்த காட்டுக்குள் தனது இறப்பு இருக்க வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. ஓய்வு பெற்ற பிறகு அப்போதைய ஆங்கிலேய அரசிடம் டாப்சிலிப்பில் அவர் எழுப்பிய தோட்டத்தில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று அனுமதி வாங்கினார். அதன்படி அவரது உடல் டாப்சிலிப் வனப்பகுதியில ஹியூகோ வுட் தங்கி இருந்த பங்களா அருகில் வானுயர்ந்த மரங்களுக்கு நடுவில் உடல் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அவர் இறந்த பிறகு பெரிய மரியாதையுடன் குன்னூரில் இருந்து டாப்சிலிப்பிற்கு உடல் கொண்டு வரப்பட்டது. மேலும் அவரது கல்லறையில் லத்தின் மொழியில் என்னை காண விரும்பினால் சுற்றிலும் பாருங்கள் என்ற வாசகம் பொறிக்கப்பட்டு உள்ளது. அவரது கல்லறை நினைவுச்சின்னமாக பராமரிக்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com