

திருச்சி,
திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது செலுத்தப்பட்ட ரத்தத்தால் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது குழந்தைக்கும் தலா 20 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம், பிரசவத்திற்காக ஒரு பெண் அனுமதிக்கப்பட்டார். பிரசவ கால சிக்கல் காரணமாக, அவருக்கு மருத்துவமனையின் ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது.
இதன் விளைவாக, அந்த பெண்ணுக்கும், அவருக்குப் பிறந்த குழந்தைக்கும் எதிர்பாராதவிதமாக எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த இந்த துயரத்திற்கு இழப்பீடு மற்றும் உரிய மருத்துவ உதவி கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ரத்த தானம் வழங்கிய நபருக்கு ரத்தம் பெற்ற போது எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவர் தொற்றின் ஆரம்பக் கட்டமான 'விண்டோ பீரியட்' எனப்படும் காலத்தில் இருந்ததால், அப்போது பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை. இந்த அறிவியல் ரீதியான குறைபாட்டால்தான் தனக்கே தெரியாமல் அந்த ரத்தம் பெண்ணுக்கு செலுத்தப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 14-ந்தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி. சரவணன் அமர்வு, பாதிக்கப்பட்ட தாய்க்கும் குழந்தைக்கும் தலா ரூ. 20 லட்சம் என மொத்தம் ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு ஒப்புக்கொண்டதை பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தது. மேலும், குழந்தைக்கு வழங்கப்படும் 20 லட்சம் ரூபாய் தொகையை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது அஞ்சலகத்தில் குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகும் வரை நிலையான வைப்பு நிதியாக முதலீடு செய்ய வேண்டும் என்றும், அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையை குழந்தையின் மருத்துவ மற்றும் வாழ்வாதார செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.