

கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரமேஸ்வரநல்லூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு கடந்த 16ந்தேதி இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.
மறுநாள் வந்து கடையை திறந்தபோது பின்பக்க சுவரில் துளையிடப்பட்டு இருந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கடையில் இருந்த 353 மதுபாட்டில்களை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்து ரூ.1,02,480 மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மேலும், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார், டாஸ்மாக் கடையில் புகுந்து மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தில்லை நாயகபுரத்தை சேர்ந்த செல்வமணி மகன் தமிழ்செல்வன் (வயது 31), சிதம்பரம் ஓமக்குளம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் சீனிவாசன்(38), காட்டுமன்னார்கோவில் அருகே கூடுவெளிசாவடியை சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வம் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நேற்று கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 353 மதுபாட்டில்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.