

நாகப்பட்டினம்:
நாகை நகராட்சி பில் கலெக்டர் அலுவலக சுவரில் 'ஓட்டை' விழுந்துள்ளது. எனவே இந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை நகராட்சி
நாகை நகராட்சி மிகவும் பழமையானதாகும். நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்கள், பெரிய கடைத்தெரு உள்ளிட்டவை உள்ளன. நகராட்சியில் ரூ.10 கோடிக்கு மேல் வரிப்பாக்கி உள்ளது. இதை வசூல் செய்ய நகராட்சி தலைவர் மாரிமுத்து, ஆணையர் ஸ்ரீதேவி ஆகியோர் தலைமையில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேற்கூரை பெயர்ந்தது
இங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் 11 பேர் பில் கலெக்டராக பணியாற்றி, நகராட்சிக்குட்பட்ட குடிநீர், சொத்துவரி, கடை வாடகைகள், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு வரிகளை வசூல் செய்து வருகின்றனர்.
இங்கு தினமும் வரி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது இந்த அலுவலகத்தின் மேற்கூரை பெயர்ந்து சிதிலமடைந்து காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் அலுவலகத்தில் தண்ணீர் கொட்டுகிறது.
பில் கலெக்டர் அலுவலக சுவரில் 'ஓட்டை'
இந்த அலுவலகத்தின் பின்புறம் உள்ள சுவரில் ஆள் நுழை 'ஓட்டை' உள்ளது. இந்த ஓட்டை வழியாக அன்னியர்கள் உள்ளே புகுந்து கோப்புகளை எடுத்து செல்ல வாய்ப்பு உள்ளது. இங்கு வரும் பொதுமக்கள் இந்த பில் கலெக்டர் அலுவலகத்தின் அவல நிலையை கண்டு முகம் சுளித்து செல்கின்றனர். எனவே பாதுகாப்பு கருதி இந்த அலுவலகத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடிக்க முடிவு
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
நாகை நகராட்சி புதிய அலுவலக முதல் தளத்தில் பில் கலெக்டர்களுக்கான அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து வசதிகளும் உள்ளது. பொதுமக்களின் சிரமத்தை குறைப்பதற்காக தரை தளத்தில் உள்ள பழைய அலுவலகத்தில் பில் கலெக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலக சுவரில் 'ஓட்டை' விழுந்த காரணத்தால் இன்னும் சில நாட்களில் அதனை இடிக்க முடிவு செய்து உள்ளோம் என்றார்.