சென்னையில் ‘ஹோலி' பண்டிகை கொண்டாட்டம் வட மாநிலத்தவர்கள் ஆடி, பாடி குதூகலம்

சென்னையில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் வண்ணமயமான ‘ஹோலி' பண்டிகையை நேற்று உற்சாகமாக கொண்டாடினர்.
சென்னையில் ‘ஹோலி' பண்டிகை கொண்டாட்டம் வட மாநிலத்தவர்கள் ஆடி, பாடி குதூகலம்
Published on

சென்னை,

இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில், வண்ணமயமான ஹோலி' பண்டிகையும் ஒன்று. குறிப்பாக வட மாநிலங்களில் இந்த பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது கொரோனாவின் வீரியம் குறையாததால் வட மாநிலங்களில் இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டதால், ஹோலி பண்டிகை களை இழந்தது.

எனினும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தடை விதிக்கப்படாததால், இங்கு வசிக்கும் வட மாநிலத்தவர்கள் நேற்று ஹோலி' பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

ஆடி-பாடி மகிழ்ந்தனர்

சென்னையில் வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் சவுகார்பேட்டை, வேப்பேரி, பட்டாளம், ஓட்டேரி போன்ற இடங்களில் ஆட்டம்-பாட்டத்துடன் ஹோலி' பண்டிகை களைகட்டியது. வண்ண, வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவியும், முகத்தில் பூசியும், வண்ண சாய தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் பீய்ச்சி அடித்தும் குதூகலித்தனர். குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி அனைவரும் ஆடி, பாடி மகிழ்ச்சி ததும்ப ஹோலி' பண்டிகையை கொண்டாடினர்.

அனுமதி மறுப்பு

சென்னையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்துக்கு கட்டண வசூலுடன் தனியார் இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். தற்போது சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் இந்த ஆண்டு இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

எனவே கடந்த ஆண்டு ஹோலி' கொண்டாட்டங்கள் நடைபெற்ற அந்த இடங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com