விடுமுறை தினம்: திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ரூ.100 சிறப்பு தரிசன கட்டண டிக்கெட்டு பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி,
கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தொடர் விடுமுறையால் நேற்று திருத்தணி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு குவிந்தனர். இதனால் பக்தர்கள் பொதுவழியில் மூலவரை தரிசிக்க நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
அதே போல் ரூ.100 சிறப்பு தரிசன கட்டண டிக்கெட்டு பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் மலைப்பாதையில் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முன்னதாக மார்கழி மாதத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு தனுர் பூஜை, 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.






