

மூங்கில்துறைப்பட்டு
சவேரியார் ஆலயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சவேரியார்பாளையத்தில் பிரசித்தி பெற்ற புனித சவேரியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.அதனை தொடர்ந்து காலை, மாலை நேரங்களில் சிறப்பு கூட்டு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
ஆடம்பர தேர்பவனி
நிகழ்ச்சியின் முக்கிய விழாவான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடந்தது. இதையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வண்ணத்து சின்னப்பர், சூசையப்பர். புனித சவேரியார், ஏசு, அந்தோணியார், ஆரோக்கிய மாதா, அன்னை தெரசா உள்ளிட்ட சொரூபங்கள் வைக்கப்பட்டது.
இதையடுத்து கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய ஆடம்பர தேர் பவனியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் வளாகத்தை வந்தடைந்தது. இதில் மைக்கேல்புரம், மூங்கில்துறைப்பட்டு, அருளம்பாடி, இளையாங்கன்னி, பொருவளூர், பொரசப்பட்டு, வடபொன்பரப்பி, வடகீரனூர், உலகளாப்பாடி, மங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் காரியக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.