

சென்னை,
தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
ஊர்காவல்படையினர் ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் காவல்துறையினருக்கு உதவிட 1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊர்காவல் படையில் பணியாற்றுபவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு வரை ஒரு நாள் ஊதியமாக ரூ.67 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அந்த ஆண்டில் அவர்களுக்கான ஊதியம் ரூ.152 ஆக உயர்த்தப்பட்டது. இப்படையில் 15,622 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் இதை மட்டுமே முழுநேர தொழிலாகக் கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.2,800 ஆக உயர்த்த வேண்டும் என ஊர்காவல் படையினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது. இதனை ஏற்ற தமிழக அரசு 2017 ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது. ஆனால், ஊர்காவல்படையினரின் அதிகாரப்பூர்வ பணி நாட்களின் எண்ணிக்கையை 5 நாட்களாக குறைத்துவிட்டது. அதனால் அவர்களின் மாத ஊதியம் ரூ.2,800-ல் இருந்து உயரவில்லை. பணி நாட்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற ஊர்காவல் படையினரின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு 2019 ஆம் ஆண்டில் பணி நாட்களை 10 ஆக உயர்த்தியது. அதே நேரத்தில் பணி நேரத்தை 4 மணி நேரமாகவும், ஊதியத்தை ரூ.280 ஆகவும் குறைத்துவிட்டது.
அதனால், மாதத்துக்கு 10 நாட்கள் பணியாற்றினாலும் அதே ரூ.2,800 மட்டுமே ஊதியமாக கிடைத்தது. இதன் மூலம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் மாத ஊதியம் ரூ.2,800-க்கு மேல் உயர்த்தப்படவில்லை. மாத ஊதியத்தை உயர்த்த தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் மறுப்பதை சுட்டிக்காட்டி ஊர்காவல் படையினர் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகினர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊர்காவல் படையினருக்கு மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும் மற்றும் மாத ஊதியமாக ரூ.16,800 வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது. இந்த ஆணையை ஆந்திரா, ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்ட போதிலும், தமிழ்நாட்டில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையினருக்கு இணையாக ஊர்காவல் படையினரும் பணியாற்றுகின்றனர். பெயரளவில் இந்த அமைப்பு காவல்துறையின் துணை அமைப்பு என்றாலும், கள அளவில் இவர்கள் காவல்துறைக்கு இணையாகவே செயல்படுகின்றனர். காவல்துறையில் அதிகரித்துக் கொண்டே செல்லும் காலியிடங்கள் மற்றும் பெருகி வரும் காவலர்கள் தேவைகளை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ஊர்காவல் படையின் சேவை அளப்பரியது என அனைத்து நிலை அலுவலர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.
பணி நிலைப்பு மற்றும் ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக போராடி வரும் ஊர்காவல்படையினர், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசில் தங்களுக்கு விடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றும் வகையிலும், ஊர்காவல் படையினருக்கு காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.