

திருச்சி,
மத்திய மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு 11 மணி அளவில் திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். வரவேற்பு முடிந்த பின்னர் அமித்ஷா திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்து தங்கினார்.
அமித்ஷாவுடன் மத்திய மந்திரிகள் எல். முருகன், மன்சுக் மாண்டவியா ஆகியோரும் வந்து இருந்தனர்.இன்று (சனிக்கிழமை) காலை 10.40 மணிக்கு அமித்ஷா ஓட்டலில் இருந்து புறப்பட்டு விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகில் உள்ள வரிச்சி குடிக்கு செல்கிறார். அங்கு பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசிவிட்டு மாலை 4.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருச்சி வருகிறார். மாலை 5.30 மணிக்கு திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு டெல்லிக்கு செல்கிறார். அமித்ஷா வருகையையொட்டி திருச்சி விமான நிலையம், புதுக்கோட்டை சாலை மற்றும் அவர் தங்கி உள்ள தனியார் ஓட்டல் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.