தேனி மீறுசமுத்திரம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தும் தரிசாய் கிடக்கும் விளை நிலங்கள்

தேனி மீறுசமுத்திரம் கண்மாய் கடந்த சில ஆண்டுகளாக நிரம்பி மறுகால் பாய்ந்தாலும் விளைநிலங்கள் தரிசாய் கிடக்கின்றன.
தேனி மீறுசமுத்திரம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தும் தரிசாய் கிடக்கும் விளை நிலங்கள்
Published on

மீறுசமுத்திரம் கண்மாய்

தேனி தாலுகா அலுவலகம் அருகில் மீறுசமுத்திரம் கண்மாய் அமைந்துள்ளது. இது சுமார் 128 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாய் மூலம் சுமார் 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.

ஆண்டு முழுவதும் இந்த கண்மாயில் தண்ணீர் இருக்கும். இதனால் இங்கு சுற்றுலா படகுகள் இயக்கி சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க இந்த கண்மாய் மூலம் நேரடி பாசனம் பெறும் விவசாய நிலங்கள் கடந்த சில ஆண்டுகளாக தரிசாக போடப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நிலங்களில் வாழை, கரும்பு, நெல் சாகுபடியும், காய்கறி சாகுபடியும் அதிக அளவில் நடந்தது. ஆனால் தற்போது கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வரும் நிலையிலும் பெரும்பாலான நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன. 3 போகம் விவசாயம் நடத்த வாய்ப்பு இருந்தபோதிலும், விவசாயிகள் பலர் விளைநிலங்களை தரிசாகவே விட்டுள்ளனர்.

மாவட்டத்தில் பல இடங்களில் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. விவசாயம் செய்ய தண்ணீர் வசதி இருந்த போதிலும் அவை வீட்டுமனைகளாக மாறுவதை தடுக்க அரசுத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்துவது இல்லை என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

தற்போது மீறுசமுத்திரம் கண்மாய் பாசன நிலங்களும் தரிசாக கிடப்பதால் எதிர்காலத்தில் அவையும் வீட்டுமனைகளாக மாறும் சூழல் ஏற்படலாம். எனவே தண்ணீர் வசதி இருந்தும் விளை நிலங்கள் தரிசாய் போடப்பட்டுள்ளதற்கான காரணங்களை ஆராயவும், இதுதொடர்பாக விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com