கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.57,500 ஊதியம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்


கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.57,500 ஊதியம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
x

தமிழக முதல்-அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த இருபது ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உயர் கல்வியை போதித்து வருபவர்கள் கவுரவ விரிவுரையாளர்கள். இருப்பினும், உயர் கல்வியின் உயிர் நாடியாக விளங்கிக் கொண்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு உரிய ஊதியம் அளிக்காத அவல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.57,500 ஊதியம் 12 மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதனை தி.மு.க. அரசு செயல்படுத்தாத நிலையில், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதையடுத்து, இதனைச் செயல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இதுநாள் வரை நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில், கல்லூரிக் கல்வி ஆணையர் மேற்சொன்ன வழக்கினை தொடுத்தவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்படி கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவில்லை என்று தெரிவித்து, 12 மாதங்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இது பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கும், நீதிமன்ற உத்தரவிற்கும் எதிரானது.

கவுரவ விரிவுரையாளர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள் என்று தெரிந்துதான் அவர்களுக்கான ஊதியம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது என்பதையும், இதன் அடிப்படையில்தான் சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது என்பதையும் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்படி கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி மே மாத சம்பளத்தை வழங்க இயலாது என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் தெரிவிப்பது பொருத்தமற்றது. கொடுப்பதும் குறைந்த சம்பளம், அதுவும் ஒரு மாதத்திற்கு கிடையாது என்று தெரிவிப்பது இயற்கை நியதிக்கு முரணான செயல் ஆகும்.

தமிழக முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கவுரவ விரிவுரையாளர்களுக்கான மே மாத சம்பளத்தை வழங்கவும், பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதியத்தை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story