கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டிய 3 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்


கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டிய 3 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்
x

கோப்புப்படம் 

கவுரவ விரிவுரையாளர்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகி, கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் அரசுத் துறைகளில் பணிபுரியும் ஏதாவது ஒரு பிரிவினருக்கு சம்பளம் தாமதப்படுத்துவது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. விதைச் சான்றளிப்புத் துறையில் பணிபுரிந்தவர்களுக்கு 2022-ம் ஆண்டு நான்கு மாதம் சம்பளம் வழங்காமல் இருந்தது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு 2024-ம் ஆண்டு சம்பளத்தை தாமதமாக வழங்கியது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வழங்காதது என்ற வரிசையில் தற்போது கவுரவ விரிவுரையாளர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.

தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான கவுரவ விரிவுரையாளர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களால்தான் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், இவர்களுடைய பணி இதுநாள் வரை நிரந்தரம் செய்யப்படவில்லை. இவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாதம் 57,500 ரூபாய் ஊதியம் 12 மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதனை சென்னை ஐகோர்ட்டு உத்தரவிற்குப் பிறகும் தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. இவர்களுக்கு மாதம் வெறும் 25,000 ரூபாய் வீதம் 11 மாதங்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படுகிறது. இப்போது இந்த ஊதியத்திற்கும் பங்கம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த மூன்று மாத காலமாக இந்த ஊதியமும் வழங்கப்படவில்லை. இது கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஓர் உதாரணம்.

தமிழ்நாட்டில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களின் விபரங்கள் கல்லூரி கல்வித் துறை இயக்குநருக்கு மே மாதமே அனுப்பப்பட்டுவிட்டதாகவும், இதன் அடிப்படையில் 202 கோடி ரூபாய் நிதி கோரி கல்லூரி கல்வித்துறை நிதித் துறைக்கு கடிதம் அனுப்பியதன் பேரில் நிதித் துறையும் இதற்கான ஒப்புதலை வழங்கிவிட்டது என்றும், இருப்பினும் இதற்கான நிதியை உயர் கல்வித்துறை விடுவிக்காததால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம்கூட வழங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கவுரவ விரிவுரையாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக கவுரவ விரிவுரையாளர்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகி, வட்டிக் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒதுக்கப்பட்ட நிதியை ஒழுங்காக மாதா மாதம் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அளிக்க இயலாத திறமையற்ற நிர்வாகம் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டிய மூன்று மாத சம்பளத்தை உடனடியாக வழங்கிட ஆவன செய்யவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற தாமதத்தை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story