உடல் உறுப்புகள் தானம் வழங்கிய கொடையாளர்களின் குடும்பத்தினருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிப்பு

ஹிதேந்திரனின் நினைவு நாளான செப்டம்பர் 23-ஆம் நாளினை, மாநில அளவில் ஆண்டுதோறும் உடல் உறுப்புகள் தான விழிப்புணர்வு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்புகள் தானம் வழங்கிய கொடையாளர்களின் குடும்பத்தினருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிப்பு
Published on

சென்னை,

உடல் உறுப்புகள் தான விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, உடல் உறுப்புகள் தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி, அவர்களுடைய குடும்பத்தினருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்று கொடையாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.

உடல் உறுப்புகள் தானம்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

உடல் உறுப்புகள் தான விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (23.09.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்று உடல் உறுப்புகள் தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நன்றி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப., அவர்கள், 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உடல் உறுப்புகள் தானம் வழங்கிய 312 கொடையாளர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய 312 கொடையாளர்களின் குடும்பத்தினருக்கு நினைவு பரிசு மற்றும் சால்வை அனுவித்து கௌரவித்தார். மேலும் உறுப்பு தான மாற்று அறுவை சிகிச்சை மற்றும் உறுப்பு தானங்களை பெறுவதில் சிறப்பாக செயலாற்றிய அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் அவர்கள் கேடயம் வழங்கிப் பாராட்டினார்.

சிறுவன் ஹிதேந்திரன்

உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படும்பொழுது ஓரிடத்தில் இருந்து மருத்துவமனைகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி குறிப்பிட்ட நேரத்தில் விரைவாக கொண்டு செல்ல ஏதுவாக பசுமை வழித்தடங்களை (Green Corridor) ஏற்படுத்திக் கொடுத்த சென்னை பெருநகர காவல் துறையை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. இந்த கேடயத்தினை சென்னை பெருநகர காவல் துறையின் சார்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் சாமுண்டீஸ்வரி, இ.கா.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் அவர்கள் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் ஆண்டறிக்கையினை வெளியிட்டார்.

‘தமிழ்நாடுதான் நாட்டிலேயே உடல் உறுப்பு தானம் வழங்குவதிலும், குருதி தானம் வழங்குவதிலும் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம், 23.09.2008 அன்று சாலை விபத்தில் சிறுவன் ஹிதேந்திரன் மூளைச்சாவு அடைந்தபோது, அவரின் பெற்றோர்களான மருத்துவர்கள் டாக்டர் அசோகன் மற்றும் டாக்டர் புஷ்பாஞ்சலி ஆகிய இருவரும், சிறுவன் ஹிதேந்திரன் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்பதை நன்கு அறிந்து, அவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். இதனை ஊடகங்கள் அப்போது முக்கியச் செய்தியாக வெளியிட்ட காரணத்தினால், உடல் உறுப்பு தானம் குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வு நாடு முழுவதும் ஏற்பட்டது. மேலும், இறந்த சிறுவனின் தாயார் டாக்டர் புஷ்பாஞ்சலிக்கு தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செல்வன் ஹிதேந்திரன் அவர்களின் நினைவு நாளான செப்டம்பர் 23-ஆம் நாளினை மாநில அளவில் ஆண்டுதோறும் உடல் உறுப்புகள் தான விழிப்புணர்வு தினமாக அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 ஆம் நாள் உறுப்பு தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், உறுப்பு தானம் வழங்க துணிச்சலான முடிவை எடுத்த அவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN)

2008 ஆம் ஆண்டு, செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசின் மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் 2015 ஆம் ஆண்டு மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையமாக உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் மட்டுமல்லாமல், சுகாதாரத் துறையிலும் தலைசிறந்த முன்னோடி மாநிலமாகவும், மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையிலும் செயல்படுகிறது. உடல் உறுப்பு மாற்றுப் பணிகளை முறைப்படுத்த⁠தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

உடல் உறுப்பு தானங்களில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று உயிருள்ளவரிடமிருந்து உறுப்பு தானம், மற்றொன்று இறந்தவர் உடலில் இருந்து உறுப்பு தானம். உயிருள்ளவரிடமிருந்து உறுப்பு தானம் என்பது ஆரோக்கியமாக உயிருள்ள ஒருவரிடமிருந்து ஒரு உறுப்பை மீட்டெடுத்து, உறுப்பு செயல் இழப்பால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலில் இடமாற்றம் செய்யப்படுவது ஆகும். மண்டல வாரியாக சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அங்கீகாரக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுக்கள் உடல் உறுப்பு தானம் பெறுபவர் மற்றும் தானம் அளிப்பவர் ஆகிய இருவரையும் ஆய்வு செய்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்குகிறது.

இறந்தவரிடமிருந்து உடல் உறுப்பு தானம் என்பது ஒரு மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் குழுவால் மூளை சாவு அடைந்ததாக கூறப்படும் ஒருவரிடம் இருந்து எடுக்கப்படும் உறுப்பு தானம் ஆகும். இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், குடல் மற்றும் கணையம் ஆகிய உறுப்புகள் மூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்து தானமாக பெறப்படுகின்றன.

மூளைச் சாவு அடைந்த பிறகு உறுப்புகளை தானம் அளித்தவர்களுக்கு அவர்களது இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், மூளை சாவடைந்து உறுப்புகளை தானம் செய்யும் கொடையாளரின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. 2023 செப்டம்பர் மாதம் முதல் 2026 செப்டம்பர் வரை தமிழ்நாட்டில் 825 கொடையாளர்களுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு - சிறந்த மாநிலம்

தமிழ்நாட்டில் அக்டோபர் 2008 முதல் செப்டம்பர் 2026 வரை 2,550 உறுப்பு கொடையாளர்களிடமிருந்து 14,845 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. இதில் 1,041 இதயம், 1,089 நுரையீரல், 2,251 கல்லீரல், 4,489 சிறுநீரகம், 50 கணையம், 41 சிறுகுடல், 5 வயிறு மற்றும் 9 கைகள் என 8,975 முக்கிய உறுப்புகளும், 1,113 இருதய வால்வு, 3,774 கார்னீயாஸ், 416 தோல், 2 இரத்த நாளங்கள், 536 எலும்புகள், 26 முதுகெலும்பு மற்றும் டிஸ்க் திசுக்கள், 3 வயிற்று மடல் என 5,870 இதர உறுப்புகள் மற்றும் திசுக்கள் என மொத்தம் 14,845 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.

இதில் 2025 செப்டம்பர் முதல் 2026 ஆகஸ்ட் வரை கடந்த ஓராண்டில் மட்டும் 312 கொடையாளர்களிடமிருந்து 78 இதயம், 106 நுரையீரல், 254 கல்லீரல், 523 சிறுநீரகம், 2 கணையம், 12 சிறுகுடல், 9 கைகள், 40 இருதய வால்வுகள், 483 கார்னீயாஸ், 104 தோல், 96 எலும்புகள் என 1,699 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது.

தேசிய அளவில் தமிழ்நாடு இருதய மாற்று சிகிச்சை மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சையில் முதலிடம் வகிக்கிறது. உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது. தேசிய அளவில் தமிழ்நாடு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக இதுவரை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒன்றிய அரசின் தேசிய விருதினை பெற்றுள்ளது.

2025 ஆம் ஆண்டு உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தமிழ்நாட்டிற்கு “சிறந்த மாநிலம்” என்ற விருதை வழங்கியுள்ளது.

கடந்த 03.08.2026 அன்று புதுடெல்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற 16 வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு மாநிலத்திற்கு "சிறந்த மாநிலத்திற்கான" விருதினை ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டில் அவர்களிடமிருந்து தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க.அருண்ராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் டாக்டர் ச.உமா, இ.ஆ.ப., சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி, இ.கா.ப., மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொ) டாக்டர் வ.லோகநாயகி, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநர் டாக்டர் ராஜ்மோகன், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலாளர் டாக்டர் ஆர். மனோ ராஜன் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com