

மதுரை,
மதுரை பைகாரா பகுதியில் முத்துராமலிங்கபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலகணேஷ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கார்த்திகை செல்வி (28). இவர்களுக்கு சாய் தீப்தி, சாரு நித்திகா (5) என்ற இரட்டை பெண் குழந்தைகள். சம்பவத்தன்று கார்த்திகைசெல்வி தனது மகள்களுடன் ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகர் பகுதியில் உள்ள தந்தை முத்துமுருகன் வீட்டுக்கு சென்றார்.
நள்ளிரவில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி சாய் தீப்தி திடீரென மாயமானாள். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, பால்பாண்டி என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள உறை கிணற்றில் சிறுமி சாய் தீப்தி பிணமாக மிதந்தாள். இதைப்பார்த்ததும் தாய் கார்த்திகை செல்வி கதறி அழுதார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, உறை கிணற்றில் வீசி சிறுமி கொலை செய்யப்பட்டது உறுதியானது.
வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இச்சம்பவம் நடந்து இருக்காது என்று கருதிய போலீசார், அதுபற்றி தீவிரமாக விசாரித்தனர். அதன்பேரில் கார்த்திகைசெல்வியின் தம்பி அஜித்குமாரின் மனைவி சபரிகாவிடம் (22) விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறி உள்ளார். துருவி துருவி விசாரித்ததில் சபரிகாதான் இந்த கொலையை செய்தது தெரியவந்தது.
சிறுமி சாய் தீப்தியின் தாய்மாமாவின் மனைவியான சபரிகா இந்த கொடூர சம்பவத்தை செய்தது ஏன்? என்பது பற்றி போலீசிடம் அவர் கூறிய தகவல்கள் வருமாறு:-
நான், கல்லூரியில் படித்தபோது உறவினர் மகனான அஜித்குமாரை காதலித்தேன். இந்த காதலை அஜித்குமார் வீட்டினர் ஏற்கவில்லை. இதனால் அஜித்குமார், என்னை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். அஜித்குமாருக்கு வசதியான இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என்று அவருடைய தாய் பூமாதேவி திட்டமிட்டு இருந்த நிலையில் இந்த காதல் திருமணம் பூமா தேவிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் என் மீது பூமாதேவி, அவருடைய மகள் கார்த்திகைசெல்வி உள்ளிட்டோர் பாசம் இல்லாமல் இருந்தார்கள். இந்தநிலையில் எனக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறந்ததால் குடும்பத்தினரிடம் அந்த குழந்தை மீதும் வெறுப்பு அதிகரித்தது. மேலும் கார்த்திகைசெல்வி ஊருக்கு வந்த போதெல்லாம் வீட்டில் பிரச்சினை அதிகரித்து வந்தது. எனவே கார்த்திகை செல்வியின் மீதும், அவரின் குழந்தைகள் மீதும் எனக்கு கோபம் ஏற்பட்டது.
கார்த்திகை செல்வியின் 2 குழந்தைகளும் அழகாக இருப்பதால்தானே என் குழந்தையை கவனிக்காமல் உள்ளனர் என்றும், வெறுப்பை காட்டுகின்றனர் என்றும் நாளுக்கு நாள் ஆத்திரம் அடைந்தேன். இந்நிலையில் கார்த்திகை செல்வி தனது குழந்தைகளுக்கு காதணி விழா வைப்பதற்கு முடிவு செய்தார். இதற்கு எனது சில நகைகளை தாய்மாமன் சீராக செய்ய வேண்டும் என்று பூமாதேவி கூறினார். நகைகளை கொடுக்க எனது மனம் இடம் கொடுக்கவில்லை.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கார்த்திகை செல்வி குழந்தைகளுடன் வந்திருந்தார். மாம னார்-மாமியார் உள்ளிட்டோர் அவரது குழந்தைகளை நன்றாக கவனித்தனர். எனவே அந்த குழந்தைகளை கொல்ல திட்ட மிட்டேன். இதற்காக நேரம் பார்த்து காத்திருந்தபோது வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டு தூங்கச் சென்றனர். எல்லோரும் அசந்து தூங்கிய நேரத்தில் நைசாக சாய் தீப்தியை தூக்கிக்கொண்டு வெளியே சென்றேன்.
குழந்தையுடன் ரெயில்வே தண்டவாளம் பகுதியை நோக்கி சென்றேன். நடந்து செல்லும் போது சாய் தீப்தி கண்விழித்து, 'அத்தை எங்கே செல்கிறோம்' என்று கேட்டாள். அதற்கு சபரிகா, 'ஒன்றுமில்லை தூங்கு' என்று தட்டி கொடுத்தேன். என் தோளிலேயே தூங்கினாள். தண்டவாளத்தின் அருகே சபரிகா சென்றபோது அந்த பகுதியில் நாய்கள் குரைத்தன.
உடனே நான் மீண்டும் வீட்டை நோக்கி சிறுமியுடன் வந்து கொண்டு இருந்தேன். சிறுமைய மீண்டும் வீட்டுக்குள் கொண்டு சென்றால் சந்தேகம் வந்துவிடும் என நினைத்தேன். எனவே அருகில் உள்ள வீட்டின் பின்புறம் சென்று அங்கிருக்கும் உறை கிணற்றுக்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் சாய் தீப்தியை தூக்கி வீசினேன். அவள் கிணற்றில் உயிருக்கு போராடினாள். ஆனால், நான் வீட்டிற்கு சென்று விட்டேன். எப்படியும் இந்த கொலையில் போலீசார் அக்கம்பக்கத்தினர் மற்றும் மற்றவர் களை மட்டுமே சந்தேகிப்பார்கள் என்று கருதினேன். இவ்வாறு சபரிகா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி சாய் தீப்தியின் உடல் பிரேத பரி சோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. இச்சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.