

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே மல்லல் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் பள்ளி வகுப்பறைக்குள் வைத்து 2 மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் இருவரும் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. உடனே ஆசிரியர்கள் இருவரையும் சமாதானம் செய்து கண்டித்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்தபோது, 2 மாணவர்களுக்குள் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது மாணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக மாணவனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சக மாணவனுக்கு முதுகு, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த மாணவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கத்திக்குத்தில் காயமடைந்த மாணவனை மீட்ட ஆசிரியர்கள் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 12-ம் வகுப்பு மாணவர் மீது சக மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.