ஆதம்பாக்கத்தில் பயங்கரம்: மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை

ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 15 பவுன் நகை, ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
ஆதம்பாக்கத்தில் பயங்கரம்: மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை
Published on

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் ஹரி. சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி சிவகாம சுந்தரி (வயது 81). இவருடைய மகன் ஸ்ரீராம். இவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். மருமகள் பானு. இவர் எல்.ஐ.சி. யில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று காலை வழக்கம் போல ஸ்ரீராமும், பானுவும் வேலைக்கு சென்றனர். மூதாட்டி சிவகாம சுந்தரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

பின்னர் பணி முடிந்து இரவு மருமகள் பானு வீட்டுக்கு வந்தார். அப்போது சிவகாமசுந்தரி தூங்கிய நிலையில் இருந்ததால் அவரை எழுப்பாமல் விட்டுவிட்டார். ஸ்ரீராம் வீட்டிற்கு வந்தபோதும் தாய் தூங்கிக்கொண்டிருப்பதாக கருதினார்.

ஆனால் படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் பார்த்தபோது அதில் பணம், நகைகள் மாயமாகியிருந்தன.

உடனடியாக தாயை வந்து பார்த்தபோது அவர் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலி, வளையல்கள் மாயமாகி இருந்தது. மேலும் தாய் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் தீபக், உதவி கமிஷனர்கள் பிராங்க் டி ரூபன், கிறிஸ்டின் ஜெசில் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர் ஷோபா தலைமையில் அதிகாரிகள் வந்து கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மோப்ப நாய் டைசன் வந்து சம்பவ இடத்தில் இருந்து பழவந்தாங்கல் பகுதி நோக்கி ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

முதல் கட்ட விசாரணையில் மூதாட்டி சிவகாமசுந்தரியை காலை 11 மணி அளவில் கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்தது, பீரோவில் இருந்தது என மொத்தம் 15 பவுன் நகை, ரூ.2 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

வீட்டின் முகப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், குடை பிடித்தபடி 2 நபர்கள் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. அவர்கள் கொலையாளியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும் வீட்டிற்கு வரக்கூடிய வேலைக்கார பெண் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் வேலைக்கார பெண், வீட்டிற்கு வேறு யார் யார் வந்தார்கள்? என்ற பட்டியலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com