பட்டப்பகலில் பயங்கரம்... நடுரோட்டில் ரவுடியை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்!

முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர்.
கொலை
Published on

புதுச்சேரி,

பட்டப்பகலில் ரவுடியை ஓட ஓட வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரவுடி வெட்டி கொலை

புதுச்சேரி கருவடிக்குப்பம் கோமாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32). இவர் மீது 2 கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், பிறந்தநாள் தினமான நேற்று ஆனந்த் கருவடிக்குப்பம் சிவாஜி சிலை மற்றும் கிருஷ்ணா நகர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து 5 பைக்கில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல், ஆனந்தின் பைக்கை இடித்து அவரை கீழே தள்ளியது.

பின்னர் கீழே விழுந்த ஆனந்தை அந்த கும்பல் சுற்றி வளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில் படுகாயமடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணை

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லாஸ்பேட்டை போலீசார், ஆனந்தின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், கடந்த ஆண்டு புதுச்சேரி நவீனா கார்டன் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரமுகர் விக்கி கொலை வழக்கில் ஆனந்த் முக்கிய குற்றவாளியாக இருந்ததாக தெரிகிறது . இதனால் அந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஆனந்த் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பிச் சென்ற மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் கருவடிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com