சென்னையில் பயங்கரம்: கள்ளக்காதலியை சுத்தியலால் அடித்துக்கொன்ற முதியவர்

கள்ளக்காதலியை சுத்தியால் அடித்துக்கொன்ற முதியவர் போலீசில் சரணடைந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை அண்ணா நகர், கிழக்கு சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (54 வயது). புடவை வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் ஏகாம்பரம் (65 வயது) தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு சாந்தி தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (65 வயது) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. 2016-ம் ஆண்டு முதல் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் கணவன்-மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். சாந்தி, புடவை வியாபாரம் செய்ய பலரிடம் கடன் வாங்கி உள்ளார். அதனை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சாந்தியின் நடத்தையில் ராஜேந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். பின்னர் இருவரும் தூங்க சென்றுவிட்டனர். நேற்று அதிகாலையில் எழுந்த ராஜேந்திரன், கள்ளக்காதலி மீது ஆத்திரம் அடங்காததால் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து, தூங்கிக்கொண்டிருந்த சாந்தியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயமடைந்த சாந்தி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ராஜேந்திரன், ரத்தக்கறை படிந்த சுத்தியலுடன் அண்ணா நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது கள்ளக்காதலியை சுத்தியலால் அடித்துக்கொன்று விட்டதாக கூறி சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கொலையான சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜேந்திரனை கைது செய்து, சாந்தி கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com