

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சஞ்சய் (வயது 18). இவர் சென்னையில் சிற்ப கலைஞராக உள்ளார். இந்த வாலிபர் கெச்சிலாபுரத்தை சேர்ந்த குமார் என்பவருடைய மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் சஞ்சய் விடுமுறைக்காக ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவில் சஞ்சய் மீண்டும் சென்னைக்கு செல்வதற்காக தனது நண்பர்கள் சிலருடன் நான்கு வழிச்சாலையில் உள்ள கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்திற்கு வந்தார்.
இதுபற்றி தகவலறிந்த குமார், மகள் மற்றும் தனது உறவினர்களான சங்கரநாராயணன்(51), மாரிமுத்து(38) ஆகியோருடன் சஞ்சய்யிடம் பேசுவதற்காக அங்கு வந்தார். பின்னர் குமார், சங்கரநாராயணன், மாரிமுத்து ஆகியோர் சஞ்சய்யை அழைத்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சஞ்சய்யை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் கழுத்து மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் சஞ்சய்க்கு கத்திக்குத்து விழுந்தது. இதை பார்த்த அவரது நண்பர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். காதலியும் அதிர்ச்சி அடைந்தார். எனினும் உயிருக்கு பயந்து சஞ்சய் ரத்த வெள்ளத்தில் ஓடினார். இருந்தபோதிலும் 3 பேரும் அவரை விரட்டிச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மாரிமுத்துவுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 2 பேரும் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சஞ்சய் மற்றும் மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், சங்கரநாராயணன், மாரிமுத்து ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.