மதுரையில் பயங்கரம்: சினிமா பானியில் பைக்கை சேஸிங் செய்து இளைஞர் வெட்டிக்கொலை

கொலை செய்து தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொலை
Published on: 

மதுரை,

மதுரையில் சினிமா பானியில் பைக்கை சேஸிங் செய்து காரால் இடித்து கீழே தள்ளி இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் விராதனூர் பகுதியில் உள்ள சத்யாநகர் அருகே நேற்று நள்ளிரவு தினேஷ் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இரு இளைஞர்கள் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர்.

இளைஞர் கொடூரக்கொலை

அப்போது, காரில் வந்த கும்பல் இளைஞர்கள் சென்ற பைக்கை சேஸ் செய்துள்ளது. சாலையில் வேகமாக சென்ற பைக் மீது காரை வைத்து அந்த கும்பல் மோதியது. இதில், பைக்கில் சென்ற இளைஞர்கள் தினேஷ், சந்தோஷ் குமார் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர்.

அப்போது, காரில் இருந்து கத்தி, அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய கும்பல், இளைஞர்கள் தினேஷ், சந்தோஷ் குமாரை சரமாரியாக வெட்டியது. இதில், சந்தோஷ் குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதேவேளை, மற்றொரு இளைஞர் தினேஷ் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தினேசை மீட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேவேளை, படுகொலை செய்யப்பட்ட சந்தோசின் உடலை மீட்ட போலீசார் அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொடூரக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொலை முன்பகை காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பானியில் பைக்கை சேஸிங் செய்து இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com