கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு பெண் படுகொலை... 2-வது கணவர் கைது

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பெண்ணை அவரது இரண்டாவது கணவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார்.
கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு பெண் படுகொலை... 2-வது கணவர் கைது
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தட்டாங்குளம் பாண்டியன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் காளீஸ்வரி (34 வயது). இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே உள்ள முட்புதரில் பலத்த காயத்துடன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பழனி போலீசார், காளீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், காளீஸ்வரியின் 2-வது கணவரான மகுடீஸ்வரனின் உருவம் பதிவாகி இருந்தது. இதையடுத்து பாலசமுத்திரத்தில் பதுங்கி இருந்த மகுடீஸ்வரனை பழனி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், காளீஸ்வரியின் தலையில் கல்லை போட்டுக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

காளீஸ்வரி ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் மகுடீஸ்வரனுடன், காளீஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு பழனியில் வீடு எடுத்து தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதனிடையே காளீஸ்வரிக்கு, குரு என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து காளீஸ்வரி பழனி அருகே உள்ள பாண்டியன் நகர் பகுதியில் புதிதாக ஒரு வீட்டில் குருவுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காளீஸ்வரி வீட்டுக்கு மகுடீஸ்வரன் சென்றார். பின்னர் காளீஸ்வரியை வீட்டின் அருகேயுள்ள முட்புதருக்குள் தனியாக அழைத்து சென்றார். அப்போது கள்ளத்தொடர்பு தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த மகுடீஸ்வரன் அங்கு கிடந்த கல்லை எடுத்து காளீஸ்வரியின் தலையில் போட்டு கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com