

சென்னை,
தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-
மத்திய அரசே குதிரை பேரம் செய்துள்ளது. மகாராஷ்டிரத்தில் என்ன நடந்தது? ஓர் அரசையே திருப்பி போட்டனர். அதற்கு பெயர் என்ன? ஓர் இயக்கத்தில் நல்ல நடைமுறையை பின்பற்றி மற்றவர்கள் வருவதை வரவேற்க வேண்டுமே தவிர வேறொன்றுமில்லை. நாங்கள் (அதிமுகவில் இருந்தபோது) எதிர்க்கட்சியாக இருந்தபோது மதிமுக கம்பம் ராமகிருஷ்ணன், திமுகவில் சேர்ந்தார். அதேபோல, அனிதா ராதாகிருஷ்ணனும் அதிமுகவிலிருந்து திமுகவில் சேர்ந்தார்.
இவர்கள் இருவருக்கும் திமுகவில் சீட்டுகள் கொடுத்தனர். அதற்கு பெயர் என்ன? ஓர் இயக்கம் நல்ல முறையில் பணியாற்றுகிறது. தமிழ்நாட்டு மக்களுக்குச் சிறப்பான முறையில் இந்த பணிகள் அமையப் போகிறது என விரும்பினால், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வரலாம். இதுதான் நம்முடைய ஜனநாயக உரிமை. இந்த உரிமையை பயன்படுத்தி கொண்டு, அவர்கள் ராஜினாமா செய்கின்றனர். எங்களை பொருத்தவரையில் 120 பேர் இருக்கிறோம். எங்களுக்கு எந்த வியூகமும் கிடையாது. குதிரை பேரம் என்பதெல்லாம் வார்த்தை ஜாலம்தான். நானும் 6 மாதங்களுக்குமுன் ராஜினாமா செய்துவிட்டு, இங்கு சேர்ந்தேன்; இன்று அமைச்சர் ஆகிவிட்டேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.