நீலகிரியில் தோட்டக்கலை பூங்காக்கள், படகு இல்லங்கள் இன்று திறப்பு

நீலகிரியில் இன்று (திங்கட்கிழமை) முதல் தோட்டக்கலை பூங்காக்கள், படகு இல்லங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்படுகிறது.
நீலகிரியில் தோட்டக்கலை பூங்காக்கள், படகு இல்லங்கள் இன்று திறப்பு
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதனால் பூங்காக்களில் கோடை சீசன் ரத்து செய்யப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்களை கொண்டு கொரோனா தடுப்பூசி குறித்து அலங்காரம் செய்யப்பட்டது. பூத்து குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியாமல் போனது.

பின்னர் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தங்கும் விடுதிகள் திறக்கப்பட்டதுடன், சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் சுற்றுலா தலங்கள் திறக்கப்படாததால், சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்தநிலையில் ஊரடங்கு புதிய தளர்வில் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகளுக்காக 4 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி தாவரவியல் பூங்காவில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்வது, கட்டாயமாக முககவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு இருக்கிறது.

ஊட்டி படகு இல்லத்தில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டதுடன், தொடர் மழையால் படகுகளில் தேங்கி இருந்த மழைநீரை அகற்றி பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். மேலும் 4 மாதங்களாக ஓய்வெடுத்த படகுகள் சோதனை ஓட்டம் நடத்தி சரிபார்க்கப்பட்டது. மேற்கண்ட சுற்றுலா தலங்கள் திறப்பதற்கு தயார் நிலையில் இருக்கிறது.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு உத்தரவின்படி நீலகிரியில் தோட்டக்கலை துறை பூங்காக்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் 2 படகு இல்லங்கள் ஆகிய சுற்றுலா தலங்களில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்படுகிறது. நுழைவுவாயில்களில் நுழைவுச்சீட்டு பெற காத்திருக்கும் போது சுற்றுலா பயணிகள் ஒருவருக்கு ஒருவர் போதுமான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சுற்றுலாவை நம்பி உள்ள பலரின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த தளர்வுகளை முழு பொறுப்புணர்வுடன் முறையாக பயன்படுத்த வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com