ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மருத்துவமனை உதவியாளர் தற்கொலை

திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை உதவியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மருத்துவமனை உதவியாளர் தற்கொலை
Published on

திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை உதவியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

சூதாட்டத்தால் 40-க்கும் மேற்பட்டோர் தற்கொலை

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் 40-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சமீபத்தில் சென்னையை சேர்ந்த வினோத்குமார் என்பவர் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கூறி கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவ்வாறு தொடர்ந்து பல உயிர்களை பலி வாங்கி வரும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மீண்டும் நிறைவேற்றம்

ஆனால் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6-ந்தேதி, சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.

அதன்படி கடந்த 23-ந்தேதி சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அனைத்து கட்சியினர் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

மருத்துவமனை ஊழியர்

திருச்சி திருவெறும்பூரில் மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலை உள்ளது. இங்கு உள்ள மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தவர் ரவிச்சந்திரன் (வயது 37). தூத்துக்குடியை சேர்ந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு இங்கு பணியில் சேர்ந்தார்.

இவருக்கு ராஜலட்சுமி (32) என்ற மனைவியும், சாய்வர்ஷன் (6) என்ற மகனும் உள்ளனர். ரவிச்சந்திரன் குடும்பத்துடன் துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.

ஆன்லைன் சூதாட்டம்

ரவிச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைனில் ரம்மி விளையாட தொடங்கினார். முதலில் அவருக்கு சூதாட்டத்தில் சில தொகைகள் கிடைத்தன. இதனைத்தொடர்ந்து அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கி அடிமையானார். உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் என பலரிடம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வகையில் அவருக்கு சுமார் ரூ.7 லட்சத்துக்கு மேல் கடன் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப கேட்டனர். இந்தநிலையில் ரவிச்சந்திரன் நடந்த சம்பவங்களை தனது தாயாரிடம் கூறி அழுது புலம்பி உள்ளார். அவரது தாயார் மகன் வாங்கிய ரூ.7 லட்சம் கடன் தொகையை கடன்காரர்களிடம் கொடுத்து கடனை அடைத்தார்.

மீண்டும் விளையாடினார்

அதன்பின் ஆன்லைன் சூதாட்டத்தை கைவிட்டு இருந்த ரவிச்சந்திரன் மீண்டும் விளையாட தொடங்கினார். மேலும் அவர் கந்துவட்டிக்கு கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் அவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இந்தநிலையில் கந்துவட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் கடன் தொகையை கேட்க தொடங்கினர்.

இதற்கிடையில் ரவிச்சந்திரன் மனைவி ராஜலட்சுமி தஞ்சை மாவட்டம் திருகாட்டூர் அருகே உள்ள பாதரக்குடி கிராமத்துக்கு குடும்பத்துடன் சென்று இருந்த நிலையில் வீட்டில் ரவிச்சந்திரன் மட்டும் தனியாக இருந்தார். அப்போது, கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வீட்டுக்கு வந்து சத்தம்போட்டு சென்றுள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் நேற்று முன்தினம் பணிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் நீண்டநேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் நவல்பட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தூக்க மாத்திரை தின்று தற்கொலை

அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரவிச்சந்திரன் இறந்து கிடந்தார். மேலும் படுக்கையில் தூக்க மாத்திரை அட்டைகள் கிடந்தன. இதனால் அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று தற்கொலை செய்தது தெரியவந்தது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி இருந்த அவர் கடனாளி ஆனதால் தற்கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை உதவியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com