கர்ப்பிணிக்கு சிகிச்சை அளித்த பல் டாக்டர்

திருப்பூர் அருகே நிறைமாத கர்ப்பிணிக்கு பல் டாக்டர் சிகிச்சை அளித்ததால் அந்த கிளீனிக்கை பூட்டி மருத்துவ அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கர்ப்பிணிக்கு சிகிச்சை அளித்த பல் டாக்டர்
Published on

மருத்துவ குழுவினர் ஆய்வு

திருப்பூர் பல்லடம் ரோடு சின்னக்கரை லட்சுமிநகர் பகுதியில் உள்ள ஒரு கிளீனிக்கில் நேற்று காலை மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி தலைமையிலான மருத்துவ அதிகாரிகள் குழுவினர், திடீர் சோதனை நடத்தினர்.

அந்த கிளீனிக், டாக்டர் சுசியா சுகப்பெருமாள் மற்றும் அவருடைய சகோதரி பெயரில் நடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. ஆய்வின்போது பல் மருத்துவரான சுசியா சுகப்பெருமாள் பிரசவ வலியோடு வந்த கர்ப்பிணிக்கு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

கிளீனிக்குக்கு 'சீல்'

மேலும் அந்த டாக்டரின் மருந்து பரிந்துரை சீட்டில் கருத்தடை மாத்திரை வழங்குவதற்கு எம்.டி.பி. கிட் என்று எழுதப்பட்டு இருந்தது தெரியவந்தது. பல் டாக்டர், பொது மருத்துவம் பார்ப்பது சட்டப்படி குற்றமாகும் என்பதால் சம்பந்தப்பட்ட கிளினீக்கை மருத்துவ குழுவினர் மூடி 'சீல்' வைத்தனர்.

இதுகுறித்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கனகராணி கூறும்போது, 'டாக்டரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக்கடைகளில் கருத்தடை மாத்திரைகள் வழங்கக்கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தோம். அவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்பிறகும் சிலர் விற்பனை செய்வது தெரியவந்து, சம்பந்தப்பட்ட மருந்துக்கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

டாக்டரிடம் விசாரணை

இன்று (நேற்று) கிளினீக்கில் நடந்த ஆய்வில் பிரசவ வலியோடு, ரத்த அளவு குறைவாக இருந்த பெண்ணுக்கு, அதன் வீரியத்தை அறியாமல் பல் டாக்டர் சிகிச்சை அளித்தது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அந்த கர்ப்பிணியை அங்கிருந்து மீட்டு உரிய சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். சம்பந்தப்பட்ட பல் டாக்டரிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) இணை இயக்குனர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படுகிறது' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com