ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்ட விழா கோலாகலம்..!

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்ட விழாவை மாவட்ட கலெக்டர் மற்றும் மேயர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்ட விழா கோலாகலம்..!
Published on

ஓசூர்,

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்ட விழாவை முன்னிட்டு ஓசூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. சந்திரசூடேஸ்வரரின் தேரை மாவட்ட கலெக்டர் மற்றும் மேயர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

பங்குனி உத்திரம்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளன்று நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டு விழா நிகழ்ச்சிகள், கடந்த வெள்ளிக்கிழமை, அங்குரார்ப்பணம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தேறும் இரவு, வாகன உற்சவங்களும்,சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளுக்கு பின் சந்திரசூடேஸ்வர சாமி, வாகனத்தில் எழுந்தருளி, மேள, தாளம் முழங்க வீதி உலாவாக அழைத்துச்செல்லப்பட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு சாமிக்கு, திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், சந்திரசூடேஸ்வரர், யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், இன்று காலை ஓசூர் தேர்பேட்டையில் நடந்தது. முன்னதாக, விநாயகரின் சிறிய தேர் இழுத்துச் செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, சந்திரசூடேஸ்வர சாமியின் பெரிய தேரினை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, உதவி கலெக்டர் தேன்மொழி, துணை மேயர் சி. ஆனந்தய்யா ஆகியேர் வடம் பிடித்து இழுத்து தேரேட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, பக்தர்கள் "ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா " என்ற பக்தி கேஷத்துடன் தேரை இழுத்துச் சென்றனர். பின்னர், மரகதாம்பிகை அம்மனின் தேர் இழுத்து செல்லப்பட்டது. தேர்த் திருவிழாவில், ஓசூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, கர்நாடகம், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

விழாக்கோலம்

தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஓசூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவையொட்டி, ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் நாளை (சனிக்கிழமை) இரவு, வாண வேடிக்கைகளுடன் பல்லக்கு உற்சவம் விடிய விடிய நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு, தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com