

சென்னை,
சென்னையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர், பள்ளிக்கூடத்தில் நடந்த துன்புறுத்தல் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிக்கூடம் செல்லவில்லை. தற்போது பிளஸ்-1 இறுதி ஆண்டு தேர்வை அந்த பள்ளிக்கூடத்தில் எழுத விரும்பாத அந்த மாணவர், வேறு ஒரு பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்-ல் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவரின் தாய் ஆஜராகி, "ஆசிரியர்கள் தரப்பில் பாலியல் கொடுமைக்கு ஆளானதால், அந்த பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுத மகன் பயப்படுகிறார்" என்றார். இது ஆசிரியர்கள் மீது வைக்கும் பொய் குற்றச்சாட்டு என்று பள்ளிக்கூட தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், தேர்வு எழுதும் அளவுக்கு வருகை இல்லாததால், வேறு பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "தற்போது பிளஸ்-1 தேர்வை எழுதி விட்டு, பிளஸ்-2 படிப்பை வேறு மாநிலத்தில் மாணவர் படிக்கப் போவதாக கூறுகிறார். எனவே, பள்ளிக்கூடத்திற்கு அருகே அய்யப்பன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் மாணவர் தேர்வு எழுதட்டும். அதற்கு அனுமதி வழங்க முடியுமா?" என்று சி.பி.எஸ்.இ. மற்றும் பள்ளி நிர்வாகம் நாளை (வியாழக்கிழமை) பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.