விழுப்புரம் அருகேவீடு புகுந்து நகை- பணம் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் அருகே வீடு புகுந்து நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகேவீடு புகுந்து நகை- பணம் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள குமளம் கிராமத்தை சேர்ந்தவர் மணவாளன் (வயது 75). இவர் கடந்த 27-ந் தேதியன்று மாலை 5 மணியளவில் தனது வீட்டை பூட்டிவிட்டு புதுச்சேரி மாநிலம் முத்திரையர்பாளையத்தில் உள்ள மகள் இன்பவள்ளி வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மணவாளன் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் திடுக்கிட்டனர். உடனே அவர்கள் இதுபற்றி மணவாளனை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர், புதுச்சேரியில் இருந்து குமளத்துக்கு விரைந்து வந்தார். அவர் தனது வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 2 பவுன் நகைகள், 2 பித்தளை குத்துவிளக்குகள், ஒரு காமாட்சியம்மன் விளக்கு மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து மணவாளன், வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகள், பித்தளை பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com