வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் நகை-பணம் கொள்ளை!

கள்ளக்குறிச்சி அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் நகை-பணம் கொள்ளை!
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (50), தனது மகனுடன் வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, விஜயலட்சுமி தனது மகனுடன் சொந்த ஊரான சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள செக்கடிப்பட்டு கிராமத்திற்கு சென்று தங்கி இருந்தார்.

இந்நிலையில், அவரது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை அறிந்த அவர், உடனே திரும்பி வந்து வீட்டை பார்வையிட்டார். அப்போது, முன் கதவு மற்றும் படுக்கையறை பூட்டுகள் உடைக்கப்பட்டு, வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து பீரோவை சோதனை செய்ததில், சுமார் 12 பவுன் மதிப்புள்ள நான்கு நெக்லஸ், 6 பவுன் மதிப்புள்ள இரண்டு செயின், 3 பவுன் மதிப்புள்ள டாலர் செயின், 400 கிராம் வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட மொத்தம் 28 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது. மொத்த இழப்பு மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து விஜயலட்சுமி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் விநாயகமுருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டதுடன், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டின் கதவுகள் மற்றும் பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவான கைரேகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com