

சென்னை,
சென்னை வானகரத்தில் பெண்கள் தங்கியிருந்த அறையில் ரகசிய கேமரா பொருத்தி, அவர்கள் உடை மாற்றுவதை செல்போனில் லைவாக பார்த்து வந்த வீட்டு உரிமையாளரின் மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 4 பெண்கள் வாடகைக்கு தங்கி வந்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) தங்களது அறையில் இருந்த மின்சார ஸ்விட்ச் பாக்சில் ஏதோ மாற்றம் இருப்பதை அந்தப் பெண்கள் கவனித்தனர். எனவே, சந்தேகமடைந்த அவர்கள் அந்த ஸ்விட்ச் பாக்சைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் அதிநவீன ரகசிய கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அந்தப் பெண்கள் உடனடியாக வானகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகசிய கேமராவைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில், வீட்டின் உரிமையாளரின் மகனான சரவணன் என்பவர், பெண்கள் இல்லாத நேரத்தில் அவர்களின் அறைக்குள் புகுந்து ரகசிய கேமராவைப் பொருத்தியது தெரியவந்தது.
மேலும், அந்த கேமராவைத் தனது மொபைல் போனுடன் இணைத்து, பெண்கள் உடை மாற்றுவதை லைவ் ஆகப் பார்த்து கண்காணித்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றவாளி சரவணனை வானகரம் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரகசிய கேமரா உபகரணங்களைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.