வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபர்

ஊத்துக்குளி அருகே நேற்று பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபர்
Published on

இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வீட்டின் பூட்டை உடைத்து

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன் பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது40), இவர் தனது மனைவி காயத்ரி, தாயார் நாகம்மாள் (60) மற்றும் 2 குழந்தைகளுடன் இப்பகுதியில் வசித்து வருகிறார். வடிவேல் மற்றும் காயத்ரி இருவரும் பனியன் நிறுவனத்தில் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

நாகம்மாள் அப்பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வடிவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து உள்ளார். மதியம் சுமார் 3 மணியளவில் வேலைக்கு சென்ற தனது தாயாரை அழைத்து வருவதற்காக வீட்டை பூட்டிவிட்டு மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார். தனது தாயாருடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வடிவேல் உள்ளே சென்று பார்த்தபோது மர்ம ஆசாமி ஒருவன் வீட்டுக்குள் இருப்பது தெரிய வந்தது.

திருடனை மடக்கி பிடித்தனர்

இதையடுத்து திருடன்... திருடன்... என வடிவேல் கூச்சலிட்டார்.அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வடிவேல் வீட்டுக்குள் பதுங்கி இருந்த மர்ம ஆசாமியை மடக்கிப்பிடித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் வடிவேல் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம ஆசாமி திருப்பூர் பலவஞ்சிபாளையத்தைச்சேர்ந்த முஸ்தபா மகன் இஸ்மாயில் (30) என்பது தெரிய வந்தது.

அவரை கைது செய்த ஊத்துக்குளி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஊத்துக்குளியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து வாலிபர் கொள்ளையடிக்க முயற்சி செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com