

நெல்லை,
சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நெல்லை பாளையங்கோட்டை காய்கறி மார்க்கெட்டில் நேற்று சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பாளையங்கோட்டை மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்ததால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக கிலோ ரூ.90 மற்றும் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயத்தின் விலை நேற்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.30 உயர்ந்து ரூ.120 மற்றும் ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் 2 நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட பல்லாரி ரூ.20 உயர்ந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையானது. கத்தரிக்காய் விலை ரூ.20 உயர்ந்து கிலோ ரூ.80-க்கும், தக்காளி விலை ரூ.10 உயர்ந்து கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் விலை சற்று குறைந்து கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற காய்கறிகளில் பெரிய அளவில் விலை வித்தியாசம் இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.