கரூர் மாவட்டத்தில் நூலகங்கள் செயல்பாடுகள் எப்படி உள்ளது? வாசகர்கள் கருத்து

நவீன காலத்திற்கேற்றவாறு கரூர் மாவட்டத்தில் நூலகங்கள் செயல்பாடுகள் எப்படி உள்ளது? என்பது குறித்து வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் நூலகங்கள் செயல்பாடுகள் எப்படி உள்ளது? வாசகர்கள் கருத்து
Published on

வாசிக்கும் பழக்கம்

அறிவை வளர்க்கும் புத்தகங்கள் அனைத்தும் ஒன்று கூடும் இடம் நூலகம் ஆகும். ஒரு நூலகத்தில் அனைத்து விதமான புத்தகங்கள் இருப்பதோடு, தகவல் களஞ்சியமாகவும் விளங்கி வருகின்றன. அன்றைய நாளிதழ்கள், புத்தகங்களை படிப்பதற்கு மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுக்கு தயாராக கூடியவர்கள் பயிற்சி பெறும் வகையிலும், தனியாக அமர்ந்து படிக்கும் வகையிலும் நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளது. நவீன காலத்திற்கேற்ப டிஜிட்டல் முறைகளும், கணினி முறைகளும் பயன்படுத்தப்படுகிறது. வாசிக்கும் பழக்கம் உடையவர்களின் கால்கள் நூலகத்தின் வாசற்படியை மிதிக்காமல் இருக்க முடியாது.

புத்தக வாசிக்கும் பழக்கம் மூலம் பல்வேறு தகவல்களை பெறுவதோடு, அறிவை வளர்த்துக்கொள்ளலாம். வாழ்க்கையின் முன்னேற்ற பாதைக்கு ஒரு அடித்தளமாகவும் அமைகிறது. இதனால் தான் நூலகங்கள் என்பது ஒவ்வொரு ஊரிலும் காணப்படும். அந்த ஊர்களில் உள்ளவர்கள் நூலகத்திற்கு ஒரு முறையாவது சென்று படிப்பார்கள். இன்றைய காலக்கட்டத்தில் நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் ஆரம்ப காலத்தில் தொடங்கப்பட்டு தகவல் களஞ்சியமாகவும், நூல்களின் சேமிப்பு இடமாகும் திகழும் நூலகத்தின் செயல்பாடுகளை பற்றி விசாரித்த போது பல தகவல்கள் கிடைத்தன.

103 நூலகங்கள்

அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் மொத்தம் 103 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மாவட்ட மைய நூலகம் - 1, கிளை நூலகம் - 34, ஊர்ப்புற நூலகம் - 57, பகுதிநேர நூலகம் - 11 என மொத்தம் 103 நூலகங்கள் செயல்பாட்டில் உள்ளன. கரூர் மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட மைய நூலகத்தில் மொத்த நூல்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 731. தினசரி வாசகர்களின் சராசரி வருகை - 486. தினசரி நூல்களின் மொத்த பயன்பாடு சராசரியாக 496. மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 670. மேலும் கரூர் சுற்று வட்டாரப்பகுதிகளான குளித்தலையில் 26 நூலகமும், கிருஷ்ணராயபுரத்தில் 18, அரவக்குறிச்சியில் 8, கரூரில் 51 நூலகமும் என மொத்தம் 103 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

8 பிரிவுகள்

அந்த வகையில் கரூர் மாவட்ட மைய நூலகத்தில் பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பிரிவு, நூல் ஆலோசனை பிரிவு, நூல் இரவல் பிரிவு, குறிப்புதவிப் பிரிவு, குழந்தைகள் பிரிவு, பிரெய்லி நூலக பிரிவு, இணையதள பிரிவு மற்றும் சொந்த நூல் படிக்கும் என 8 பிரிவுகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.

கரூர் மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் கூறும் போது, கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக கலங்கரை விளக்க திட்டத்தின் கீழ் டி.என்.பி.எஸ்சி. குரூப் 2 மற்றும் குரூப் 4 ஆகிய போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு சுமார் 200 பேர் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கின்றனர், என்றார்.

அமைதியான சூழ்நிலை

கரூரில் செயல்படும் நூலங்கள் குறித்து வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

சின்னக்காளியம்பாளையத்தை சேர்ந்த தேவிகா கூறுகையில், வீட்டில் வைத்து படிக்க முடியாததால், இங்கு வந்து அமைதியான சூழ்நிலையில் படிக்கும்போது மனது சாந்தமாக உள்ளது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில், இங்கு அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. மேலும் டி.என்.பி.எஸ்சி. தேர்வுக்காக பள்ளி பாடப்புத்தகங்கள் மற்றும் தினசரி நாளிதழும் படிக்கின்றேன், என்றார்

செல்லாண்டிப்பாளையத்தை சேர்ந்த பிரியங்கா கூறுகையில், மேற்படி நூலகத்திற்கு தினந்தோறும் வந்து டி.என்.பி.எஸ்சி. தேர்வுக்காக பல்வேறு புத்தகங்களை படிக்கின்றேன். அரசு தேர்வுக்காக தயார் செய்பவர்களுக்கு அனைத்து விதமான புத்தகங்களும், அடிப்படை வசதிகளும் கிடைக்கின்றன, என்றார்.

காந்திகிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா கூறுகையில், நான் மேற்படி நூலகத்திற்கு தினந்தோறும் வந்து போட்டித்தேர்வுகளுக்காக குறிப்பாக டெட் தேர்வுக்காக பல்வேறு புத்தகங்களை படிக்கின்றேன். கரூர் மாவட்ட மைய நூலகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியும் அளிக்கின்றனர். இது என்னைப் போன்ற போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி பெற வருபவர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது, என்றார்.

பயிற்சி காடுக்கிறார்கள்

சின்னதாராபுரம் மல்யுத்தம் கிராமத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் கூறுகையில், நான் மேற்படி நூலகத்திற்கு கடந்த 3 1/2 வருடங்களாக டி.என்.பி.எஸ்சி. தேர்வுக்காக வந்து படிக்கிறேன். கிராமத்தில் உள்ள கிளை நூலகத்தில் அதிகளவில் யாரும் சென்று படிக்க வருவதில்லை. மேலும் இந்த நூலத்தில் வந்து படிப்பதால் எனக்கு மற்ற மாணவர்களை பார்த்து மோட்டிவேசன் அதிகமாகிறது. இங்கு அனைத்து 2019 எடிசன் புத்தகங்களும் படிப்பதற்கு கிடைக்கின்றன. போட்டித் தேர்வுகளுக்காக வெளியில் இருந்து வந்து எங்களுக்கு பயிற்சி கொடுக்கிறார்கள். இந்த பயிற்சி, நூலகம் வந்து படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பயனுள்ளதாக அமைகிறது, என்றார்.

காமராஜபுரத்தை சேர்ந்த விஜய் கூறுகையில், நான் விவசாய அலுவலர் மற்றும் வங்கி தேர்வுக்காக இங்கு வந்து ஏராளமான புத்தகங்களை படித்து வருகிறேன். மேலும் போட்டித்தேர்வுகளுக்காக மேற்படி நூலகம் வந்து படிப்பது மனதிற்கு நிறைவாகவும், மாணவ - மாணவியரின் அறிவை வளர்க்கும் அறிவுக்களஞ்சியமாகவும் திகழ்கிறது, என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com