ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்கார சென்னை என்ற இலக்கை எப்படி எட்ட முடியும்? ஐகோர்ட்டு கேள்வி

ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்கார சென்னை என்ற இலக்கை எப்படி எட்ட முடியும்? என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்கார சென்னை என்ற இலக்கை எப்படி எட்ட முடியும்? ஐகோர்ட்டு கேள்வி
Published on

சென்னை,

சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை மீன் கடைகள் ஆக்கிரமித்துள்ளதாகவும், ஐஸ் பெட்டிகள், மீன் வாங்கவருவோரின் வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறி, சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், "சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் மீன் கடைகள் நடத்தும் மீனவர்களுக்காக ரூ.9 கோடியே 97 லட்சம் செலவில் மீன் சந்தை அமைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன'' என்று கூறினார்.

என்ன நடவடிக்கை?

மேலும் அவர், "மீன்சந்தை அமைக்கும் பணி 6 மாதங்களில் முடிந்துவிடும். அதுவரை மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி தற்காலிகமாக போக்குவரத்தை முறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. லூப் சாலையில் உள்ள உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து, உரிமம் இல்லாத உணவகங்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் உத்தரவாதம் அளித்தார்.

அதை தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:-

சாலை ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், சாலையில் ஆக்கிரமிப்புக்குதான் அனுமதியளிக்கப்படுகிறதே தவிர, போக்குவரத்துக்கு அனுமதியில்லை என்ற நிலை தற்போது நிலவுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?

சமரசம் இல்லை

லூப் சாலையில் மேற்கு பகுதியில் 25 சதவீதம் சாலை, நடைபாதை ஆக்கிரமித்து சிறு ஓட்டல்கள் செயல்படுகின்றன. இதற்கு யார் உரிமம் வழங்கியது? பொதுசாலைகளை ஆக்கிரமிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. இதில் எந்த ஒரு சமரசமும் செய்ய முடியாது. இந்த சாலை மீன் கழிவுகள் கொட்டுவதற்காக உள்ளதா?

ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்ட முடியும்? லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி, வருகிற 18-ந்தேதிக்குள் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

லூப் சாலையின் மேற்கு பகுதியில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். நாங்கள் மீனவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதேநேரம், சாலையை ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com